சுடச்சுட

  

  காணாமல்போன வாகனத்துக்கு காப்பீட்டுத் தொகை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 13th February 2019 07:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காணாமல் போன வாகனத்துக்கு காப்பீட்டுத் தொகை  வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு கோவை நுகர்வோர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
   கோவை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (72). இவர் அப்பகுதியில் உள்ள வாகன விற்பனையகத்தில் இருசக்கர வாகனம் ஒன்றை 2014 இல் வாங்கியுள்ளார். இதற்காக விற்பனையகம் மூலம் காப்பீடு நிறுவனத்தில் ரூ. 48 ஆயிரத்துக்கு காப்பீடு செய்திருந்தார். இந்த வாகனம் 2015 ஏப்ரலில் காணாமல் போனது. சில மாதங்கள் வாகனத்தைத் தேடியும் கிடைக்காததையடுத்து 2016 ஆம் ஆண்டு மாணிக்கம் அளித்தப் புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.  
   பின்னர் வாகனம் தொலைந்து போனதை விற்பனையகத்திடம் தெரிவித்துவிட்டு காப்பீடு நிறுவனத்திடம் அதற்கான காப்பீடு தொகை கோரி மாணிக்கம் விண்ணப்பம் செய்தார். ஆனால், காலதாமதமாக வழக்குப் பதிவு செய்திருப்பதாக கூறி காப்பீடு தொகை வழங்க நிறுவனம் மறுத்துவிட்டது. இதையடுத்து தனது கோரிக்கையைப் பரிசீலித்து காப்பீடு தொகையை வழங்கக்கோரி மாணிக்கம் கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
   வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையத் தலைவர் பாலச்சந்திரன், உறுப்பினர் அமுதா ஆகியோர், காணாமல் போன வாகனத்துக்கு காப்பீடு செய்திருந்தால் மொத்த காப்பீடு மதிப்பான ரூ.48 ஆயிரத்தில் இருந்து 75 சதவீதத்தை, அதாவது ரூ.36 ஆயிரத்தை 6 சதவீத வட்டியுடன் வழங்கவும், மனுதாரரின் மன உளைச்சலுக்கு ரூ.5 ஆயிரத்தை 9 சதவீத வட்டியுடனும், வழக்கு செலவுக்காக ரூ.3 ஆயிரத்தை மனுதாரர் மாணிக்கத்துக்கு காப்பீடு நிறுவனம் வழங்க உத்தரவிட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai