கோவையில் 6 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்: சென்னை, திருச்சியில் தனிப்படையினர் விசாரணை

கோவையில் 6 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக

கோவையில் 6 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை, திருச்சியில் தனிப் படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் மாங்கோ சிங் மகன் பிரதீவ் சிங் (26). இவர், கோவை, மரக்கடை அருகே மில் சாலையில் உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த பார்சல் நிறுவனம் கோவையில் உள்ள தங்க நகைப் பட்டறை, நகை வியாபாரிகளிடம் இருந்து நகைகளைச் சேகரித்து வெளி மாநிலங்களுக்கு விமானம் மூலம் அனுப்பி வைப்பது வழக்கம். இந்நிலையில் 6 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை மும்பை செல்லும் விமானத்தில் அனுப்பி வைப்பதற்காக பிப்ரவரி 7 ஆம் தேதி அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் பிரதீவ் சிங் சென்று கொண்டிருந்தார். பீளமேடு அருகே வந்தபோது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் பிரதீவ் சிங் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி, அவரைத் தாக்கிவிட்டு அவரிடமிருந்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் இருந்த பையைப் பறித்துச் சென்றனர்.இதுதொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைச் சேகரித்து போலீஸார் விசாரித்து வந்தனர். இதில் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் மூவரின் புகைப்படங்களை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்த போலீஸார் கோவையில் கடந்த 20 நாள்களுக்கு முன்னர் விடுதிகளில் தங்கியிருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் விவரங்களைச் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
 நகைகளைத் திருடிய நபர்கள் வேறு மாவட்டங்களுக்கு தப்பிச் சென்றிருக்க வாய்ப்புகள் இருப்பதாக தனிப் படையினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சென்னை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தனிப் படையினர் விசாரித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com