பணியிட மாற்றம் செய்யப்பட்ட 294 தொழிலாளர்களைபணி நீக்கம் செய்தது தனியார் நிறுவனம்

கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்ட 294 தொழிலாளர்கள் பணியில்

கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்ட 294 தொழிலாளர்கள் பணியில் சேராததால், அவர்களை பணி நீக்கம் செய்வதாக தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.ஐ.சி.சி.டி.யூ. அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் சார்பில் 600-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் 21.8.18-ஆம் தேதி முதல் 100 நாள்களுக்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டு ஊழியர்கள் வேலைக்குத் திரும்பினர். பணிக்குத் திரும்பிய தொழிலாளர்களில் 302 பேரை உத்தரகாண்ட், மகாராஷ்டிரம், ஆந்திரம் போன்ற மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்து தனியார் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டது.
 இதில் 8 பேர் மட்டும் பணியில் சேர்ந்த நிலையில் மற்றவர்கள் பல முறை கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் எஞ்சிய 294 ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்கியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களின் 100 நாள் வேலைநிறுத்தத்தால் கோவையில் உள்ள எங்களது தொழிற்சாலைக்கான ஆர்டர்கள் படிப்படியாக குறைந்தன. இதனாலேயே வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டு வந்த அனைத்துத் தொழிலாளர்களுக்கும் கோவையில் வேலைவாய்ப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
 அவர்கள் பணிக்குச் சென்று சேருவதற்கு தேவையான கூடுதல் நிதிச் சுமையையும் நிர்வாகமே ஏற்றுக் கொண்டது.  இந்நிலையில், தொழிலாளர்கள் பணியிட மாறுதல் உத்தரவை ஏற்க மறுத்து வருவதால் சட்ட விதிகளுக்குள்பட்டு  அவர்களை 11.2.19 முதல் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறோம். இருப்பினும்  தொழிலாளர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து பணியிட மாறுதல் செய்யப்பட்ட இடத்துக்கு பணியில் சேர எழுத்து மூலமாக 7 நாள்களுக்குள் தெரிவித்தால்  பரிசீலனை செய்யத் தயாராக உள்ளோம்  என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com