வேளாண்மையைப் போலவே ஜவுளித் துறையிலும் வருவாயை இரட்டிப்பாக்க நடவடிக்கை: பாஜக தேசிய பொதுச் செயலர்

விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதைப் போலவே

விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதைப் போலவே ஜவுளித் தொழில் துறையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தேசிய பொதுச் செயலர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் தொழில் துறையினரின் கருத்துகளைப் பெறும் நிகழ்ச்சி நாடு முழுவதிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் ஜவுளித் தொழில் முனைவோரின் கருத்துகளைப் பெறும் நிகழ்ச்சி கோவை இந்திய தொழில் வர்த்தக சபை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முரளிதர் ராவ், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள், பஞ்சாலைகள், விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள், ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், சாயப்பட்டறை உரிமையாளர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
இந்தக் கூட்டத்தில், சைமா பொதுச் செயலர் செல்வராஜ், ஐ.டி.எஃப். ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச் செயலர் விஜயகுமார்,  திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர் சங்கத்தின் ஆர்.சீனிவாசன், விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் மாணிக்கவாசகம், கரூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் நாச்சிமுத்து உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். மேலும், தங்களது கருத்துகளை கோரிக்கைகளாக எழுதி, பிரதமரின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கருத்துகளைச் சேகரிக்கும் பெட்டியில் போட்டனர்.
இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
ஜவுளிப் பொருள் ஏற்றுமதியில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களை எளிமைப்படுத்த வேண்டும். உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதி மானியங்களை விரைவில் வழங்க வேண்டும். ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். வெளிநாடுகளில் ஹெக்டேருக்கு 1,400 கிலோ வரை விளையக் கூடிய பருத்தி ரகங்கள் பயிரிடப்படும் நிலையில், அதுபோன்ற புதிய ரகங்களை கண்டுபிடித்து பருத்தி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
பருத்திக்கு வழங்கப்பட்டிருப்பது போலவே செயற்கை நூலிழைகளுக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை விதிக்க வேண்டும். அரசு அறிவிக்கும் திட்டங்கள் பயனாளிகளுக்கு உடனடியாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சோமனூர் ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அமைக்க வேண்டும். நெசவாளர் காப்பீடு திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். 25 சதவீத மானியத்தில் சோலார் அமைப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சிறுமுகை, புளியம்பட்டி வட்டாரத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு பயன்படும் வகையில் சாய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜவுளித் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பேசினர்.
இதைத் தொடர்ந்து முரளிதர் ராவ் பேசியதாவது:
பாஜக சார்பில் நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தொழில் அமைப்பினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 10 கோடி பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. பாஜக தலைவர் அமித் ஷா முதல் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் இதில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த பகுதியில் முக்கிய தொழிலாக உள்ள ஜவுளித் தொழில் துறையில் புதிய தொழில் முனைவோரையும், திறமையான தொழிலாளர்களையும் உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது போலவே, ஜவுளி உள்ளிட்ட தொழில் துறையிலும் இரு மடங்கு வருவாய் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். 
தேசிய தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசன், தேர்தல் பிரசார பொறுப்பாளர் ஜி.கே.நாகராஜ், மாவட்டத் தலைவர் சி.ஆர்.நந்தகுமார் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு
இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலர் முரளிதர் ராவ் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்து போட்டியிடும் முடிவில் பாஜக உள்ளது. பாஜக கூட்டணியால் மட்டுமே சிறந்த ஆட்சியையும், உண்மையான வளர்ச்சியையும் வழங்க முடியும். கூட்டணிக்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம். யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை விமர்சனம் செய்திருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. அதிமுக தலைமை எதுவும் அதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கவில்லை என்பதால் அதற்கு பதிலளிக்கும் அவசியம் இல்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com