அதிக வேகத்துடன் இயக்கப்பட்ட தனியார் பேருந்தை மடக்கிப் பிடித்த போலீஸார்

அதிக வேகத்துடன் இயக்கப்பட்ட தனியார் பேருந்தை மடக்கிப் பிடித்த போலீஸார் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்

அதிக வேகத்துடன் இயக்கப்பட்ட தனியார் பேருந்தை மடக்கிப் பிடித்த போலீஸார் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம் விதித்தனர். சமூக வலைதளங்களில் விடியோ காட்சிகள் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
கோவையில் சில தனியார் பேருந்து ஓட்டுநர்கள் விதிமுறைகளை மீறும் வகையில் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்று விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஒண்டிப்புதூர்-துடியலூர் வரை செல்லும் தனியார் பேருந்து அதிவேகமாக வாகனத்தை இயக்குவதாக ஏற்கெனவே புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் பேருந்து பிப்ரவரி 11 ஆம் தேதியன்று ஹோப்ஸ் பகுதியில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி அதிவேகமாக சென்றுள்ளது. 
மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர். இதைத் தனது செல்லிடப்பேசியில் விடியோ பதிவு செய்த நபர் ஒருவர் அதைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது முகநூல், கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. தனியார் பேருந்து ஓட்டுநரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.
சமூக வலைதளங்களில் வெளியான விடியோ காட்சிகளின் அடிப்படையில் பீளமேடு போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் போலீஸார் அடுத்த சில மணி நேரங்களில் சம்பந்தப்பட்ட பேருந்தை பீளமேடு அருகேயுள்ள தனியார் கல்லூரியின் பேருந்து நிறுத்தத்தில் வைத்து வழிமறித்து பிடித்தனர். அப்போது பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர், விடியோ பதிவு செய்யப்பட்ட நாளில் பேருந்தை ஓட்டியது தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் வேறொரு ஓட்டுநர் என்பதைத் தெரிவித்தார். மேலும், விதிகளை மீறி வாகனத்தை இயக்கியது தவறுதான் என ஒப்புக்கொண்ட அவர் அதற்கான அபராதத்தைச் செலுத்துவதாகத் தெரிவித்தார். 
இதையடுத்து அதிக வேகத்துடன் பேருந்தை இயக்கியது, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பயணிகளை ஏற்றிச் சென்றது போன்ற குற்றங்களுக்காக போக்குவரத்து போலீஸார் ரூ.1100 அபராதம் வசூலித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com