முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கோடைக் காலத்தில் நீர் ஆவியாவதைத் தடுக்க பயிர் மேலாண்மைத் துறை ஆலோசனை
By DIN | Published On : 28th February 2019 07:42 AM | Last Updated : 28th February 2019 07:42 AM | அ+அ அ- |

கோடைக் காலங்களில் நிலத்தின் மேற்பரப்பில் இருந்து 5 செ.மீ. ஆழத்துக்கு மண்ணை கிளரி விடுவதன் மூலம் நீர் ஆவியாதலைக் கட்டுப்படுத்தலாம் என கோவை வேளாண் பல்கலை. பயிர் மேலாண்மைத் துறை இயக்குநர்
கீதா லட்சுமி தெரிவித்துள்ளார்.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் நிலத்திலிருந்து நீர் ஆவியாதல் அதிகரித்துள்ளதால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களும் வாட்டம் கட்டுள்ளன. இதனால் பயிர்களுக்கான தண்ணீர் தேவையும் அதிகரித்து உள்ளது.
ஏற்கெனவே தண்ணீர் பற்றாக்குறையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கோடை வெயில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நிலத்தின் மேற்பரப்பில் இருந்து 5 செ.மீ. ஆழத்துக்கு மண்ணை கிளரி விடுவதன் மூலம் நீர் ஆவியாதலைக் கட்டுப்படுத்தலாம்.
இது தொடர்பாக வேளாண் பல்கலை. பயிர் மேலாண்மைத் துறை இயக்குனர் கீதா லட்சுமி கூறியதாவது:
கோடைக் காலங்களில் நிலத்திலுள்ள நுண்துளைகள் வழியாக நீர் ஆவியாகிறது. வெயில் தாக்கம் அதிகரிக்கும்போது ஆவியாகும் நீரின் அளவும் அதிகரிக்கிறது. மண்ணிலுள்ள ஈரத் தன்மை குறைவதால் பயிர்களுக்குத் தேவையான நீர் சத்துகள்
கிடைக்காமல் வாட்டமாகிவிடும். தண்ணீர் பற்றாக்குறையால் மகசூல் இழப்புக்கும் வாய்ப்புள்ளது. எனவே, நிலத்தின் மேற்பரப்பில் இருந்து 5 செ.மீ. ஆழத்துக்கு மண்ணை கிளரிவிட வேண்டும். மண்ணை கிளரி விடுவதால் அதிலுள்ள நுண்துளைகள் அடைக்கப்பட்டு நீர் ஆவியாதல் தடுக்கப்படும். இதனால் மண்ணிலுள்ள ஈரப்பதமும் தக்கவைக்கப்பட்டு மகசூல் இழப்பை தடுக்கலாம்.
கோடை காலத்தில் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இயற்கை பூச்சிக்கொல்லிகள் அல்லது வேளாண் அலுவலர்களின் ஆலோசனையோடு குறைவான வீரியமுள்ள ரசாயன மருந்துகளை பயன்படுத்தலாம் என்றார்.