முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
சர்வதேச ரோல்பால்: கோவை மாணவி இடம் பெற்ற இந்திய அணி சாம்பியன்
By DIN | Published On : 28th February 2019 07:40 AM | Last Updated : 28th February 2019 07:40 AM | அ+அ அ- |

ஆசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய அணியில் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவியும் இடம் பெற்றுள்ளார். தென்னிந்திய அளவில் இவர் மட்டுமே பங்கேற்றுள்ளதாக கோவை மாவட்ட ரோல்பால் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரோல்பால் சங்க மாநிலச் செயலாளர் சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் 2003 ஆண்டில் இருந்தும், தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டில் இருந்தும் ரோல்பால் விளையாடப்பட்டு வருகிறது.
இது 13, 14, 17, 19 ஆகிய வயதுக்கு உள்பட்டோருக்கு என 4 பிரிவுகளில் விளையாடப்படுகிறது. தேசிய அளவிலும், ஆசிய அளவிலும், சர்வதேச அளவிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில், ஆசிய அளவிலான போட்டிகளில் இந்தியா கடந்த மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. நடப்பு ஆண்டில் ஜெனரல் பிரிவில் ஆடவர், மகளிருக்கான ஆசிய கோப்பை ரோல்பால் விளையாட்டு கர்நாடகத்தில் பிப்ரவரி 21- 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, வங்க தேசம், நேபாளம், பூடான் உள்ளிட்ட 17 நாடுகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் இந்திய அணி, வங்க தேசத்தை 4 - 3 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. சாம்பியன் பட்டத்தைப் பிடித்த மகளிர் அணியில் கோவை, சுகுணா பிப்ஸ் பள்ளியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி மஹிமாஸ்ரீ பங்கேற்றார். தென்னிந்தியா அளவில் சர்வதேசப் போட்டிகளில் மஹிமாஸ்ரீ மட்டுமே இடம் பிடித்துள்ளார்.
இவர், ஏற்கெனவே கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலானப் போட்டியில் தமிழக அணிக்கு கேப்டனாக இருந்து வெண்கலப் பத்தக்கம் பெற்ற தந்தார். இலங்கையில் நடைபெற்ற சர்வதேச நட்பு முறையிலான போட்டியில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கி வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்தார். இவருக்கு, கோவை மாவட்ட ரோல்பால் சங்க ராஜசேகர் பயிற்சியாளராக உள்ளார் என்றார்.