முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள்: மார்ச் 2 ஆம் தேதி தொடங்குகிறது
By DIN | Published On : 28th February 2019 07:43 AM | Last Updated : 28th February 2019 07:43 AM | அ+அ அ- |

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்படும் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் கோவை ஸ்ரீகிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமங்களின் தலைவரும், நிர்வாக அறங்காவலருமான எஸ்.மலர்விழி கோவையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவை சார்பில் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2019' என்ற மின்னணு மற்றும் மென்பொருள் உருவாக்கும் போட்டி மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 47 ஒருங்கிணைப்பு மையங்களில் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக தென் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே கல்லூரி இதுதான். 2017, 2018 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து மூன்றாம் முறையாக இப்போட்டிகள் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இப்போட்டியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைப்பார். மாணவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் சிறப்புரையாற்ற உள்ளார்.
நடப்பு ஆண்டு நடைபெறவுள்ள போட்டிகளில் இந்தியா முழுவதும் இருந்து 42 ஆயிரம் அணிகள் பங்கேற்க உள்ளன. இதில், ஒரு அணியில் 2 ஆசிரியர்கள், 6 மாணவர்கள் உள்பட 8 பேர் இருப்பர். போட்டிகள் 36 மணி நேரம் தொடர்ந்து இடைவிடாது நடைபெறும்.
இதில் மாணவர்கள் உருவாக்கும் மின்னணு, மென்பொருள் வடிவமைப்புகளின் மாதிரிகள் சுகாதாரம், பாதுகாப்பு, கிராமப்புற வளர்ச்சி, வேளாண் துறை, கழிவு மேலாண்மை உள்ளிட்ட துறைகளுக்கு வழங்கப்படும். அவற்றை துறை நிபுணர்கள் அங்கீகரித்த பின்னர் அதை மேம்படுத்துவதற்காக அணியினருக்கு ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகையைக் கொண்டு சம்பந்தப்பட்ட அணியினர் தாங்கள் வடிவமைத்த மின்னணு மென்பொருளை மேலும் மேம்படுத்தி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் அதை பரிசோதித்துப் பார்த்த பின்னர் உரிய துறையிடம் ஒப்படைப்பார்கள்.
இதன் மூலம் அரசுத் துறைகளில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க முடியும் என்றார். கல்லூரி முதல்வர் ஜே.ஜேனட், பேராசிரியர்கள் பி.அசோகவர்த்தனன், பாலமுருகன், ஸ்ரீதேவி ஆகியோர் உடனிருந்தனர்.