எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்புக்கு நடவடிக்கை: தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் உறுதி

கோவையில் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய

கோவையில் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு எச்.ஐ.வி. தொற்று ரத்தம் தவறுதலாகச் செலுத்தப்பட்டதாக திருப்பூரைச் சேர்ந்த அச்சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை சார்பில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில்,  தேசிய குழந்தைகள் ஆணையம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி தலைமையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன், மருத்துவர்களிடம் புதன்கிழமை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 வயது சிறுமிக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதாக ஆணையத்துக்கு வந்த புகார் அடிப்படையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், மருத்துவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இங்கு நடைபெற்ற விசாரணையில் பங்கேற்குமாறு சிறுமியின் பெற்றோர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்கள் பங்கேற்கவில்லை. முதல்கட்டமாக மருத்துவர்களிடம் ஆலோசனை முடிந்தது. அடுத்ததாக மருத்துவமனை ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் திருப்பூரில் வியாழக்கிழமை விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. 
 விசாரணையில் சேகரிக்கப்படும் தகவல்கள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுப்புக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com