அஸ்வின் மருத்துவமனை சார்பில் லாப்ராஸ்கோப்பி, எண்டோஸ்கோப்பி மாநாடு: இன்று தொடங்குகிறது

அஸ்வின் மருத்துவமனை மற்றும் இந்திய ஜீரண நல அறுவை சிகிச்சை சங்கம் இணைந்து நடத்தும்

அஸ்வின் மருத்துவமனை மற்றும் இந்திய ஜீரண நல அறுவை சிகிச்சை சங்கம் இணைந்து நடத்தும் லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மற்றும் எண்டோஸ்கோப்பி குறித்த மூன்று நாள் செயல்முறை கருத்தரங்கம் மற்றும் மாநாடு வெள்ளிக்கிழமை (ஜனவரி 4) தொடங்குகிறது.
இதுகுறித்து அஸ்வின் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு, டாக்டர் அஸ்வின் தங்கவேலு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஜீரண நல அறுவை சிகிச்சை சங்கம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையை டாக்டர் டி.இ.உத்வாடியா  அறிமுகப்படுத்தினார். இவர் மற்றும் மூத்த அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் இணைந்து இந்திய ஜீரண நல அறுவை சிகிச்சை சங்கத்தை தொடங்கினர். இந்த சங்கத்தில் நாடு முழுவதும் இருந்து 6,500- க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த சங்கத்தின் சார்பில் ஜீரண மண்டலம் தொடர்பாக தொடர் மருத்துவக் கல்வி, கருத்தரங்கம், தேசிய மற்றும் மாநில அளவிலான மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பல இளம் மருத்துவர்களுக்கு லாப்ராஸ்கோப்பி மற்றும் எண்டோஸ்கோப்பி குறித்த நவீன சிகிச்சை முறைகள் கற்றுத்தரப்படுகின்றன. மேலும் இத் துறையில் நடக்கும் அனைத்துவித புதிய கண்டுபிடிப்புகள் குறித்து உறுப்பினர்களுக்கு கொண்டுச் செல்வதும் முக்கிய நோக்கம் ஆகும். 
இதனைக் கருத்தில் கொண்டு அஸ்வின் மருத்துவமனை மற்றும் இந்திய ஜீரண நல அறுவை சிகிச்சை சங்கம் இணைந்து ஜனவரி 4, 5, 6 ஆகிய தேதிகளில் சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் லாப்ராஸ்கோப்பி, எண்டோஸ்கோப்பி குறித்த செயல்முறை கருத்தரங்கம் மற்றும் மாநாட்டை நடத்துகிறது.  
இக்கருத்தரங்கில் பங்கேற்கும் இளம் மருத்துவர்களுக்கு உருவகப்படுத்தப்பட்ட மாதிரிகள் மூலம் செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், அஸ்வின் மருத்துவமனையில் இருந்து மேற்கொள்ளப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் காணொலிக் காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், பித்தப்பை, கணையம் போன்ற ஜீரண மண்டலம் தொடர்பான சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், மருத்துவ உபகரணங்கள் தொடர்பான கண்காட்சியும் இடம்பெறுகிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாக லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மற்றும் எண்டோஸ்கோப்பி ஆகிய இரு துறைகள் தொடர்பாக ஒரே நேரத்தில் செயல்முறை கருத்தரங்கம் மற்றும் மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 
இந்தக் கருத்தரங்கில் நாடு முழுவதும் இருந்து 300- க்கும் மேற்பட்ட இளம் மருத்துவர்கள் பங்கேற்கின்றனர். இந்த செயல்முறை கருத்தரங்கம் மற்றும் மாநாட்டை பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தொடங்கிவைக்கிறார். 
இதில், இந்திய ஜீரண நல அறுவை சிகிச்சை சங்கத்தின் தலைவர் டாக்டர் சுபாஷ் கன்னா, முதன்மை ஆலோசகர் டாக்டர் கிருஷ்ணா ராவ் போன்ற மூத்த மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com