தனியார் மருத்துவமனை மீதான புகார்களை விசாரிக்க மருத்துவ தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்: இந்திய மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்

தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவுக்கு மாற்றாக

தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவுக்கு மாற்றாக மருத்துவ தீர்ப்பாயம் ஏற்படுத்த வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
 இது குறித்து அச்சங்கத்தின் கோவைக் கிளைத் தலைவர் டாக்டர் வினோத் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 ஜனநாயகத்துக்கு எதிராக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நுகர்வோர் பாதுகாப்பு மசோதா காரணமாக மருத்துவத் தொழிலில் ஈடுபட முடியாத நிலை உருவாகி உள்ளது. 
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையில் இழப்பீட்டுத் தொகை வழங்கவே மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள நுகர்வோர் பாதுகாப்பு கமிட்டிக்கு அதிகாரம் உண்டு. ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மசோதாவின் மூலம் ரூ. ஒரு கோடி வரையில் மாவட்ட நுகர்வோர் கமிட்டிக்கு ம்,  ரூ. ஒரு கோடியில் இருந்து ரூ.10 கோடி வரையில் மாநில அளவிலான கமிட்டிக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 
 இதில் கமிட்டியில் நோயாளிகள் மட்டுமின்றி அவர்களைச் சார்ந்த அமைப்புகளும் புகார் செய்யலாம். அந்த கமிட்டியில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் என யாரும் அங்கம் வகிக்க மாட்டார்கள். மருத்துவர்கள் இல்லாத புதிய நுகர்வோர் பாதுகாப்பு கமிட்டியை அமைக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நுகர்வோர் பாதுகாப்பு மசோதா தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கு பல்வேறு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். 
 இந்த புதிய மசோதா சட்டமாக இயற்றப்பட்டால் டாக்டர்கள் மிரட்டலுக்கு ஆளாக நேரிடும். எனவே புதிய நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவுக்கு மாற்றாக மருத்துவ தீர்ப்பாயம் ஏற்படுத்த வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை ஏற்படுத்த மத்திய அரசு புதிய மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. இதனால் தனியார் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளின் செயல்பாடு பாதிக்கும். இந்த இரு மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com