Enable Javscript for better performance
அத்திக்கடவு - அவிநாசி புதிய திட்டத்தால் கோவை மாவட்ட மக்களுக்கு பயனில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு- Dinamani

சுடச்சுட

    

    அத்திக்கடவு - அவிநாசி புதிய திட்டத்தால் கோவை மாவட்ட மக்களுக்கு பயனில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

    By DIN  |   Published on : 08th January 2019 09:46 AM  |   அ+அ அ-   |    |  

    அத்திக்கடவு-அவிநாசி புதிய திட்டத்தால் கோவை மாவட்ட மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை என்பதால் பழைய திட்டத்தையே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம்(கட்சி சார்பற்றது) சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
     இது தொடர்பாக ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம் அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி.வேணுகோபால் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு விவரம்:
     அத்திக்கடவு-அவிநாசி திட்டம் என்பது பில்லூர் அணை அருகே அத்திக்கடவு என்ற இடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து மேல் இருந்து கீழ் நோக்கி புவி ஈர்ப்பு விசையில் காரமடை வட்டாரம் வெள்ளியங்காடு கிராமம் முதல் அவிநாசி வரையில் உள்ள குளம் குட்டைகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தை ஆய்வு செய்ய தமிழக அரசு சார்பில் மோகனகிருஷ்ணன் தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அக் குழு அத்திக்கடவு முதல் அவிநாசி வரையில் 250 குளம், குட்டைகளை பரிந்துரை செய்திருந்தனர். அதன்பிறகு திட்டத்தின் தலைமடைப் பகுதியான காரமடை வட்டாரத்தில் 50 குளம், குட்டைகளை புறக்கணித்துவிட்டு பிறப் பகுதிகளுக்கு விரிவுப்படுத்தி 602 குளம், குட்டைகளாக உயர்த்தினர். தற்போது 900 குளம், குட்டைகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
     காரமடை பகுதியில் 50 குளம், குட்டைகளை புறக்கணித்துவிட்டு திட்டத்தை தலைகீழாக மாற்றி அத்திக்கடவில் தண்ணீர் எடுக்காமல் ஈரோடு மாவட்டம், காலிங்கராயன் அணைப் பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து பம்ப் செய்யும் திட்டமாக அரசு அறிவித்துள்ளது. அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்கு தொடர்பு இல்லாத கோபி-பெருந்துறை பகுதிகளை தலைமடையாக வைத்து திட்டத்தை அறிவித்துள்ளார்கள். இந்தப் பகுதி ஏற்கனவே கீழ் பவானி பாசனத்தின் கீழ் பயன் பெற்று வரும் பகுதிகள் ஆகும். 
     இந்த புதிய திட்டத்தால் காரமடை, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களுக்கு தண்ணீர் கிடைக்காது. ஆகவே அந்த இரண்டு வட்டாரங்களுக்கு தனித் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தற்போது காரமடை- பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களுக்கு அறிவித்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. 
     உண்மையான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு சொந்தமான பகுதி மக்களை நம்ப வைத்து ஏமாற்றும் விதமாக அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படுகிறது. ஆகவே அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை போல காரமடை-பெரியநாயக்கன்பாளையம் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். 
     பேப்பர் கப் மீதான தடையை விலக்க வேண்டும்...: இதுகுறித்து தமிழ்நாடு, புதுச்சேரி பேப்பர் கப் தயாரிப்பு சங்கத்தின் சார்பில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
    ஜனவரி 1 ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதில் பேப்பர் கப்பும் அடங்கும். 94 சதவீதம் பேப்பராலும், மீதமுள்ள 6 சதவீதம் உணவுப் பயன்பாட்டுக்கு உகந்த எல்.டி.பி.இ. கோட்டிங் மூலம் பேப்பர் கப் தயாரிக்கப்படுகிறது. தற்போது 6 சதவீதம் உள்ள எல்.டி.பி.இ. கோட்டிங்கை 4 சதவீதம் குறைத்தால் தடையில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு மறுபரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளது. 
     இத்தொழிலை நம்பி தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேர் உள்ளனர். மேலும் பேப்பர் கம்ப ஆனது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருள் ஆகும். மறுசுழற்சி செய்யக் கூடியவை. தற்போது தடை காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கிகளில் பெறப்பட்ட கடனை திருப்பச் செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளோம். ஆகவே வங்கிகளில் பெற்ற கடனை நிலுவையில் வைக்கவும், பேப்பர் கப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசிடம் பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp