சுடச்சுட

  

  ரூ.ஒரு கோடி நகைக் கொள்ளை வழக்கு: சென்னை நீதிமன்றத்தில் இருவர் சரண்

  By DIN  |   Published on : 12th January 2019 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவையில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் தொடர்புடைய இருவர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர்.
   கோவையில் உள்ள பிரபல தங்க நகைக் கடையில் கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த சி.ஆர்.அர்ஜுன் (22). டி.எஸ்.வில்ஃபிரட் (31) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும், கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள தங்களது நிறுவனத்தின் மற்றொரு கிளையில் இருந்து கோவை கிளைக்குத் தேவையான ரூ.98.50 லட்சம் மதிப்புள்ள 3.1 கிலோ தங்க நகைகள் மற்றும் 243 கிராம் வெள்ளிப் பொருள்களுடன் நிறுவனத்துக்குச் சொந்தமான காரில் திங்கள்கிழமை வந்தனர்.
   கோவை மாவட்டம், நவக்கரை அருகே இவர்களது கார் வந்தபோது, இரு கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் நகைக் கடைக்குச் சொந்தமான காரை நிறுத்தி அதன் ஊழியர்களைத் தாக்கிவிட்டு காருடன் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக கேஜி சாவடி மற்றும் கேரள மாநில போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
   இதற்கிடையில், கோவை மதுக்கரை அருகே உள்ள தென்றல் நகர் பகுதியில் நகைக் கடைக்குச் சொந்தமான காரை போலீஸார் செவ்வாய்க்கிழமை மீட்டனர். மேலும் கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் கோவை மதுக்கரை அருகே உள்ள வழுக்குப்பாறை பகுதியில் மீட்கப்பட்டது.  இந் நிலையில், நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஜெயபிரகாஷ் ஆகியோர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரண் அடைந்தனர். அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சரண் அடைந்த இரண்டு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரையும் கோவை  நீதிமன்றத்தில் ஜனவரி 18ஆம் தேதி ஆஜர்படுத்த உள்ளனர். அப்போது இரண்டு பேரையும் ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகபோலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai