சுடச்சுட

  

  விபத்தில் இறந்த தனியார் நிறுவன பெண் ஊழியரின் குழந்தைகளுக்கு இ.எஸ்.ஐ. சார்பில் உதவித் தொகை

  By DIN  |   Published on : 12th January 2019 06:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவையில் சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் நிறுவன பெண் ஊழியரின் குழந்தைகளுக்கு இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது.
   இதுகுறித்து தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் துடியலூர் கிளை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
  கோவை தடாகம் சாலையில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் இன்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தவர் கோமதி (33). இவர் உணவு இடைவேளைக்காக வீட்டுக்குச் சென்றுவிட்டு நிறுவனத்துக்கு இருசக்கர வாகனத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் தலையில் அடிபட்டு கோமதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இவர் பணியாற்றிய நிறுவனம் இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் கோமதியை பதிவு செய்து அதற்கான சந்தா தொகையைச் செலுத்தி வந்தது. 
  இதையடுத்து இ.எஸ்.ஐ. சார்பில் கோமதியின் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்க கோவை சார்பு மண்டல அலுவலகத்தின் இணை இயக்குநர் ரகுராமன் உத்தரவிட்டார். கோமதியின் இரு பெண் குழந்தைகளுக்கும் ரூ.13,368 வீதம் குழந்தைகளின் 25-ஆவது வயது வரையிலும் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. ஒரு குழந்தைக்கான உதவித் தொகையானது இதற்காக தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இ.எஸ்.ஐ. நிர்வாகம் மாதாந்திர உதவித் தொகையை செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் நேரடியாகச் செலுத்துவது இதுவே முதல் முறையாகும். 
  இதற்கான நிகழ்ச்சியில், இ.எஸ்.ஐ. கிளை அலுவலகம் சார்பில் மேலாளர் அ.கோவிந்தராஜ், காசாளர் மதன்குமார் ஆகியோர், தனியார் நிறுவனத்தின் பொது மேலாளர் எஸ்.குணசேகரன் முன்னிலையில் கோமதியின் கணவர் வெங்கடேஷ், குழந்தைகளிடம் நிலுவைத் தொகை ரூ.55,196-ஐ வழங்கினர். 
  தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக திட்டத்தின் கீழ் உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவி, நோய் கால விடுமுறை, பணப் பலன்கள், பேறுகால விடுமுறை, தொழிலாளர்களைச் சார்ந்தோருக்கான உதவித் தொகை, வாரிசுகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai