சுடச்சுட

  

  அனைத்துப் பள்ளிகளிலும் இந்த மாத இறுதிக்குள் நூலகம்: அரசு உத்தரவு

  By DIN  |   Published on : 13th January 2019 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இந்த மாத இறுதிக்குள் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
  தமிழகத்தில் உள்ள 3,527 நடுநிலைப் பள்ளிகள், 6,036 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் பயன்பாட்டுக்கான நூலகங்கள் அமைக்கப்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்துக்காக 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.10 ஆயிரமும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.7 ஆயிரமும், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையுள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.4 ஆயிரமும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையுள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  நூலகத்துக்காக தனி அறையில் புத்தக அலமாரியில் புத்தகங்களை வைக்க வேண்டும், வைக்கப்படும் நூல்கள் குறித்த விவரங்களை சேமிக்க வேண்டும், ஆசிரியர்கள், மாணவர்கள் அடங்கிய நூலகப் பராமரிப்புக் குழுவை அமைத்து படிக்கும் ஆர்வத்தை மாணவர்களிடையே தூண்ட வேண்டும். இதற்காக பள்ளி ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும். புத்தகங்களை சரியான விதத்தில் பாதுகாக்க வேண்டும், நூலகத்துக்கு மேலும் நூல்களை முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனங்கள், கல்வியாளர்கள் மூலம் நன்கொடையாகப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகளையும் அரசு வகுத்து அனுப்பியுள்ளது.
  இந்தத் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 104 உயர்நிலைப் பள்ளிகளிலும், 238 நடுநிலைப் பள்ளிகளிலும் நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்துக்காக நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.11.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நூலகத்துக்கான பணிகளை வரும் 31-ஆம் தேதிக்குள் முடித்து, நூலகம் அமைக்கப்பட்ட விவரங்களுடன் பிப்ரவரி 11-ஆம் தேதிக்குள் மாநிலத் திட்ட இயக்ககத்துக்கு அறிக்கை அனுப்பும்படி இயக்குநர் இரா.சுடலைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
  அத்துடன், நூலகத்துக்கு வாங்க வேண்டிய தமிழ், ஆங்கில நூல்கள், மகாபாரத கதைகள், பொது அறிவுப் புத்தகங்கள், மாணவர்களின் தேர்வு பயம் நீங்குவதற்காக பிரதமர் மோடிஎழுதிய எக்ஸாம் வாரியர்ஸ் நூலின் மொழி பெயர்ப்பான பரிட்சைக்குப் பயமேன் என்பது உள்ளிட்ட நூல்களின் பட்டியலையும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் வெளியிட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai