சுடச்சுட

  

  இடைநிலை ஆசிரியர்களை மழலையர் பள்ளிகளில் பணியமர்த்துவதற்கு எதிர்ப்பு

  By DIN  |   Published on : 13th January 2019 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  இடைநிலை ஆசிரியர்களை மழலையர் பள்ளிகளில் பணியமர்த்துவதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
  தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் 2,381 அங்கன்வாடி மையங்களில் தமிழக அரசு சார்பில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் 122 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. வகுப்புகள் வரும் 18ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன. இதில் மொத்தம் 2,748 குழந்தைகள் சேர்ந்து பயில இருப்பதாக ஏற்கெனவே கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது.
  இந்த பள்ளிகளுக்கு அருகில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 283 பேர்கள் தேர்வு செய்யப்பட்டு மழலையர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இவர்களில் பெரும்பாலானோர் அரசு உத்தரவை ஏற்றுக் கொள்ளவில்லை.
  தங்களுக்கான புதிய பணி உத்தரவில் கையெழுத்திடாமல் புறக்கணித்து வரும் இடைநிலை ஆசிரியர்கள், இதைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர். 
  முன்னதாக கோவை மாவட்டம் முழுவதிலும் உள்ள 15 வட்டாரங்களில் இடைநிலை ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலர் சி.அரசு கூறியதாவது:
  தொடக்கக் கல்வித் துறையை அழிக்கும் நோக்குடன் தமிழக அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களை மழலையர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக அனுப்புவதில் எந்த நியாயமும் இல்லை.
  தமிழக அரசு புதிதாகத் தொடங்கும் மழலையர் பள்ளிகளுக்கு மாண்டிசோரி கல்வி முறையில் பயின்று தேர்ச்சி பெற்று பணி வாய்ப்புக்காக காத்திருப்பவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். 
  எனவே, இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்வதுடன், அவர்களை மீண்டும் பழைய பள்ளிகளிலேயே பணியாற்றும்படியான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்தபடியாக வரும் 18-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட உள்ளோம் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai