சுடச்சுட

  

  கர்நாடக இசைக் கலைஞர் பிரமீளா குருமூர்த்திக்கு சங்கீத சாம்ராட் விருது

  By DIN  |   Published on : 13th January 2019 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கோவை பாரதீய வித்யா பவன் சார்பில் 24ஆவது பொங்கல் விழா மற்றும் டி.கே.பட்டம்மாள் நூற்றாண்டு விழாவையொட்டி கர்நாடக இசைக் கலைஞரும், தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான பேராசிரியர் பிரமீளா குருமூர்த்திக்கு சங்கீத சாம்ராட் விருது வழங்கப்பட்டது.
  கடந்த 1964-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாரதீய வித்யா பவன் கோவை மையத்தின் சார்பில் கடந்த 23 ஆண்டுகளாகப் பொங்கல் பண்டிகையின்போது 5 நாள்களுக்கு இசை விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்பர். மேலும், மூத்த இசைக் கலைஞருக்கு சங்கீத சாம்ராட் விருது வழங்கப்படும்.
  அதன்படி, இதுவரை லால்குடி ஜி.ஜெயராமன், டி.கே.பட்டம்மாள், எம்.பாலமுரளிகிருஷ்ணா, டி.கே.கோவிந்தராவ், எஸ்.தட்சிணாமூர்த்தி பிள்ளை, பாலக்காடு ஆர்.ரகு, என்.ரமணி, வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்ரமணியம் உள்ளிட்டோருக்கு இவ் விருது வழங்கப்பட்டுள்ளது.
  கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பாரதீய வித்யா பவனில் 24ஆவது பொங்கல் இசை விழா மற்றும் டி.கே.பட்டம்மாள் நூற்றாண்டு விழா சனிக்கிழமை தொடங்கியது. இவ்விழாவில் கர்நாடக இசைக் கலைஞரும், தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான பேராசிரியர் பிரமீளா குருமூர்த்திக்கு சங்கீத சாம்ராட் விருதையும், கோவையைச் சேர்ந்த எஸ்.வி.சுப்ரமணியத்துக்கு கோவை சுப்ரி முருக கான விருதையும் பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் வழங்கினார்.
  இதைத் தொடர்ந்து கர்நாடக இசைக் கலைஞர் நித்ய ஸ்ரீ மகாதேவன் குழுவினரின் இசைக் கச்சேரி நடைபெற்றது. 
  இதையடுத்து, ஜனவரி 16 ஆம் தேதி வரையில் பொங்கல் இசை விழா நடைபெறுகிறது. வரும் 3 நாள்களில் சஹானா சாம்ராஜ் குழுவினரின் புல்லாங்குழல் - சித்ர வீணை, ராமகிருஷ்ணன் மூர்த்தி குழுவினரின் இசைக் கச்சேரிகள் நடைபெறுகின்றன. கடைசி நாளான 16-ஆம் தேதி இளவரசர் ராம வர்மா குழுவினரின் இசைக் கச்சேரியுடன் இசை விழா நிறைவடைகிறது.
  கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஆராதனை விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு தியாகராஜ உற்சவம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்க உள்ளது. 
  இந் நிகழ்ச்சியில் கோவை மையம் நிர்வாகக் குழு இயக்குநர் கிருஷ்ணகுமார், குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, இணைச் செயலாளர் சூரியநாராயணன், பொருளாளர் அழகிரி சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai