சுடச்சுட

  

  கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: தம்பதி உள்பட 3 பேர் கைது

  By DIN  |   Published on : 13th January 2019 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக தம்பதி உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
  கோவை, சௌரிபாளையம் பகுதியில் பீளமேடு போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த தம்பதியைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் சுமார் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த முருகன் (56), அவரது மனைவி ஜெயா (45) என்பதும், ஒத்தக்கால்மண்டபத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளதும், தேனியில் இருந்து கஞ்சா கொண்டு வந்து சிறிய, சிறிய பொட்டலங்களாக மாற்றி கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. 
  இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் ரூ.5 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர். இதில் முருகன் மீது பெரியகடை வீதி காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
  இதேபோல காட்டூர் போலீஸார் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் முதியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 700 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் புது சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (69) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரிடம் இருந்து கஞ்சாவைப் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai