பொன் மாணிக்கவேல் விவகாரத்தில் ஆளுநர் தலையிட வேண்டும்: தன்னார்வ சேவை அமைப்புகள் கோரிக்கை

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தனி அதிகாரி பொன் மாணிக்கவேல் தனிப்பட்ட விதத்தில் பழிவாங்கப்படுவதாகவும் இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் தலையிட வேண்டும் என்று

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தனி அதிகாரி பொன் மாணிக்கவேல் தனிப்பட்ட விதத்தில் பழிவாங்கப்படுவதாகவும் இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் தலையிட வேண்டும் என்று கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வ சேவை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக ஊழல் எதிர்ப்பு இயக்கம், தமிழக விவசாயிகள் சங்கம், கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள், முன்னாள் வருவாய் அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள மனு விவரம்:
தமிழ்நாட்டில் நீண்ட நெடுங்காலமாக நிலை குலைந்து கிடந்த சிலை திருட்டு வழக்குகளை விசாரணை செய்வதற்காக பொறுப்பேற்ற காவல் துறைத் தலைவர் பொன் மாணிக்கவேல், தன்னுடைய அசாதாரண முயற்சிகளாலும், கடுமையான நுணுக்கமான புலன் விசாரணையாலும் நூற்றுக்கணக்கான புராதன சிலைகளைத் தேடி கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளார். அவற்றின் மதிப்பு பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். அவைகளைக் களவாடியவர்களில் சிலர், மிக செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள், உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரிகளுடன் நட்புறவு கொண்டிருப்பவர்கள்.
இதுபோன்ற பல இடையூறுகளை சமாளித்து சாதனை புரிந்துள்ள அவரை, சிலைக் கடத்தல் புலன் விசாரணை சிறப்பு அதிகாரியாக நீதிமன்றம் நியமித்துள்ளது. ஆனால் அத்தகைய அதிகாரி மீது அமைச்சர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுவதும், அவரது விசாரணைக்குத் தேவையான வசதிகளை தொடர்ந்து பறிப்பதும், செல்வாக்குள்ள குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு சதித் திட்டமோ என்ற சந்தேகம் எழுகிறது.
அவருக்கு வழங்கப்பட வேண்டிய மாத ஊதியம் கூட நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாகத் தலையிட்டு பொன் மாணிக்கவேலுவின் விசாரணைக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், காவல் துறை கட்டுப்பாட்டுக்கு கலகம் விளைவித்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிலைத் திருட்டு தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்புக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com