பொங்கல் விடுமுறை: பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்: பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீஸார்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக கோவையில் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்  அலைமோதியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக கோவையில் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்  அலைமோதியது.
  பொங்கல் பண்டிகைக்காக  6 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் கோவை போன்ற பெரு நகரங்களில் பணிபுரிபவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்கின்றனர். பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்களில் விடுமுறை நாள்கள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் ஏற்கெனவே பயணத் திட்டத்தை முடிவு செய்து பயணச்சீட்டு முன்பதிவு செய்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 
  கோவையில் சனிக்கிழமை இரவு முதலே கோவை காந்திபுரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையங்களில் வெளியூர்களுக்குச் செல்லும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பேருந்து நிலையப் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. 
  கோவையில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்வோரில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தைத் தேர்வு செய்திருந்ததால் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. சாதாரண நாள்களில் தினசரி ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் கோவை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு முதல் பத்தாயிரத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து சென்றுள்ளனர். இதனால் ரயில் நிலையத்தின் இரண்டு வாசல்களிலும் போலீஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
   ரயில் நிலையத்துக்கு வரும் விரைவு, அதிவிரைவு ரயில்களில் மோப்ப நாய்கள் கொண்டு சோதனையிடப்படுகிறது. பயணிகளின் உடமைகள் அனைத்தும் ஸ்கேனர் கருவிகள் மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பட்டாசு போன்ற வெடிபொருள்களை எடுத்துச் செல்லவும் தடை விதித்துள்ளனர்.
   பேருந்து, ரயில் நிலையங்களில் நிலவும் கூட்டத்தைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பொதுமக்களைக் காக்கும் வகையில் நகரில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல வெளியூர்களுக்குச் செல்லும் பொதுமக்கள் வீடுகளைப் பூட்டிச் செல்வது வழக்கம். இதனால், இரவு நேரங்களில் போலீஸ் ரோந்துப் பணியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் விபத்துகள் நேரிட வாய்ப்பு உள்ளதால் இரவு நேரங்களில் போலீஸார் வாகனத் தணிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com