பொங்கல் விடுமுறை: கோவை குற்றாலம், வால்பாறையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பொங்கல் விடுமுறையை ஒட்டி கோவை குற்றாலம் அருவியில் புதன்கிழமை மட்டும் சுமார் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

பொங்கல் விடுமுறையை ஒட்டி கோவை குற்றாலம் அருவியில் புதன்கிழமை மட்டும் சுமார் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
கோவையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோவை குற்றால அருவி உள்ளது. அடர்ந்த வனப் பகுதிக்குள் இந்த அருவி இருப்பதாலும், ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதாலும் ஏராளாமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் சாடிவயல் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து வனத் துறைக்குச் செந்தமான வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்காக பெரியவர்களுக்கு ரூ. 50, சிறியவர்களுக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் விடுமுறை வழக்கத்தைவிட இந்த ஆண்டு ஐந்து முதல் ஆறு நாள்கள் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனால் கோவை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை குற்றலாத்தில் குவிந்தனர். கடந்த மூன்று நாள்களாகவே கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர் வரை கோவை குற்றாலம் பகுதிக்கு வந்தனர். இந்நிலையில் புதன்கிழமையன்று மட்டும் சுமார் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வந்தனர்.
வனத் துறை சார்பில் பொங்கல் விழா...:  கோவை சிறுவாணி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதிக்குள் வனத் துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தலைமை வனப் பாதுகாவலர் சஞ்சய்  ஸ்ரீவத்சவா, வனத் துறை அதிகாரி வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
விழாவில் கும்கி யானைகள் ஜான், கொம்பன் ஆகியவை கலந்துகொண்டன. கும்கி யானைகள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. யானைகளுக்கு பொங்கல், பழங்கள் படைக்கப்பட்டன. வன அதிகாரி பழனிராஜா, வனப் பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
வால்பாறை சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம்... தொடர் விடுமுறை காரணமாக வால்பாறைப் பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிக்கையை ஒட்டி கடந்த சனிக்கிழமை முதல் கல்லூரி, பள்ளிகளுக்கு வரும் வியாழக்கிழமை வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை என்பதால் கடந்த சனிக்கிழமை முதலே வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினர். பொங்கல் தினமான செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. வால்பாறை நகரிலும், எஸ்டேட் பகுதியிலும் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பின. சுற்றுலாத் தலங்களான கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சிமுனை, சோலையாறு அணை ஆகிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர்.  
சுற்றுலாப் பயணிகளிடம் அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் வனத் துறை, போதுமான அடிப்படை வசதிகளை செய்யவில்லை என்று சுற்றுலாப் பயணிகள் குறைபட்டுக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com