மேட்டுப்பாளையம் யானைகள் முகாமில் பொங்கல் விழா

மேட்டுப்பாளையம் கோயில் யானைகள் முகாமில் பொங்கல் விழாவையொட்டி பாகன்களுக்கான விளையாட்டுப் போட்டியில்

மேட்டுப்பாளையம் கோயில் யானைகள் முகாமில் பொங்கல் விழாவையொட்டி பாகன்களுக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
கோவை மாவட்டம்,  மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வன பத்திரகாளியம்மன் கோயில் பவானி ஆற்றங்கரையோரத்தில் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கியது. இம்மாதம் 30ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், முகாமில் கோயில் யானைகளைப் பராமரித்து வரும் பாகன்களுக்கு பொங்கல் விழாவையொட்டி கடந்த திங்கள்கிழமை முதல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. உறியடி, கயிறு இழுத்தல், லக்கிகார்னர், சாக்கு ஓட்டம், ஓட்டம், கூடைப் பந்து, குண்டு எறிதல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட போட்டிகள்நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு புதன்கிழமை பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
முன்னதாக, முகாமில் உள்ள விநாயகர் கோயில் முன்பு பொங்கலிட்டு யானைகளுக்கு கரும்பு, பொங்கல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றிபெற்ற பாகன்களுக்கு கோவை மண்டல இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் தலைமை வகித்துப் பரிசுகள் வழங்கினார். கோவை உதவி கோட்டப் பொறியாளர் பிரேம்குமார்,  பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையர் பழனிகுமார், வன பத்திரகாளியம்மன் கோயில் உதவி ஆணையர் ராமு, ஈரோடு உதவி ஆணையர் நந்தகுமார், முகாம் பொது மேற்பார்வையாளர் வெற்றிச்செல்வன்,மேட்டுப்பாளையம் வனச் சரகர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com