உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பிரதமர் விமர்சிப்பது தவறு: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர்

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பிரதமர் விமர்சித்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பிரதமர் விமர்சித்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடி ப.ஜீவானந்தத்தின் நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 
இதையொட்டி கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் ஜீவாவின் உருவப் படத்துக்கு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
சபரிமலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மதிக்காமல் பிரதமர் பேசியிருக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே கேள்வி எழுப்புவதன் மூலம் மோடி தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 
ஒரு நாட்டின் பிரதமரே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காதபோது, நாட்டில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள பிரதமரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையாகக் கண்டிக்கிறது.
 கொடநாடு விவகாரத்துக்கு பதில் சொல்ல வேண்டிய எடப்பாடி பழனிசாமி, தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பதைப் போல நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல. முதல்வர் மீது இத்தனை பெரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதால் அவர் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகி நியாயமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 
நெல்லையில் வரும் 22ஆம் தேதி லெனின் சிலைத் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து 23ஆம் தேதி திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்றுப் பேச உள்ளார். 
அதேநேரம், தமிழ்நாட்டில் அமைய உள்ள மதச்சார்பற்ற கூட்டணி தொடர்பாக கலந்துரையாடலிலும் யெச்சூரி ஈடுபடுவார் என்றார்.
 மக்களவைத் தேர்தல் குறித்து ஜி.ராமகிருஷ்ணன் கூறும்போது, மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதிலும் ஒரே மாதிரியான கூட்டணி அமையப்போவதில்லை. மாநிலத்துக்கு மாநிலம் கூட்டணி மாறுபடும். நாடு முழுவதிலும் பாஜகவை தோற்கடித்த பிறகு, மதச்சார்பற்ற அரசை அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் கட்சியின் நிலைப்பாடு என்றார்.
 முன்னாள் எம்.பி. நடராஜன், மாநிலக் குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா, மாவட்டச் செயலர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com