கோவை ரயில் நிலையத்தில் 100 அடி உயர கொடிக்கம்பம்: இன்று பயன்பாட்டுக்கு வருகிறது
By DIN | Published On : 24th January 2019 02:24 AM | Last Updated : 24th January 2019 02:24 AM | அ+அ அ- |

கோவை ரயில் நிலையத்தில் 100 அடி உயர கொடிக்கம்பம் வியாழக்கிழமை (ஜனவரி 24) பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
நாடு முழுவதிலும் மக்கள் நெருக்கம் மிகுந்த 73 ரயில் நிலையங்களில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு பெரிய அளவிலான தேசியக் கொடி பறக்கவிடப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது. இதில் மும்பை உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட கோவை ரயில் நிலையத்தில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்தக் கொடிக்கம்பத்தை கோட்ட மேலாளர் சுப்பாராவ் வியாழக்கிழமை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர். முன்னதாக இதன் ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.