தனியார் கேபிள் சேனல்களுக்கு கட்டணம்: கோவையில் இன்று ஒளிபரப்பு நிறுத்தம்
By DIN | Published On : 24th January 2019 02:28 AM | Last Updated : 24th January 2019 02:28 AM | அ+அ அ- |

தனியார் சேனல்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவைக் கண்டித்து கோவையில் இன்று வியாழக்கிழமை (ஜனவரி 24) ஒரு நாள் கேபிள் சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்படுவதாக கேபிள் ஆபரேட்டர்கள் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட அனைத்து கேபிள் ஆபரேட்டர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாகிகள் அனுபாபு, தியாகராஜன், மனோகரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கேபிள் ஆபரேட்டர்கள் ஆகியோரிடம் கருத்துக்களும், ஆலோசனைகளும் பெறாமல் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கேபிள் ஒளிபரப்பு நடைமுறையை ப்ரீபெய்டு நடைமுறைக்கு மாற்றுவதாக அறிவித்துள்ளது. ஆகவே ஒவ்வொரு சேனலுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. பொதுமக்களின் பொழுதுபோக்கு பயன்பாட்டுக்காக பார்க்கக் கூடிய சேனல்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிப்பது பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தும். ஆகவே சேனல்களுக்கு 18 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும்.
கேபிள் ஆபரேட்டர்களுக்கு இடையே போட்டியின்றி தொழில் செய்வதற்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இலவசமாக கொடுக்கக் கூடிய சேனல்களை போல பிற சேனல்களுக்கு பொதுமக்களுக்கு பார்க்கக் கூடிய வகையில் கட்டணத்தை குறைத்து, சேனல்களும், பொதுமக்களுக்கும் பயன்பெறும் வகையில் டிராய் செயல்பட வேண்டும்.
இக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி என தென்னிந்தியா முழுவதும் கேபிள் சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்படும்.
மேலும் இந்தக் கோரிக்கைகளுக்கு மத்திய அரசும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டிராய் அமைப்பும் கட்டுப்படவில்லை என்றால் தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பிப்ரவரி 10 ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.