நகரில் விதிமுறைகள் மீறி டிஜிட்டல் விளம்பர பலகைகள்: மாநகராட்சிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
By DIN | Published On : 24th January 2019 02:29 AM | Last Updated : 24th January 2019 02:29 AM | அ+அ அ- |

கோவை மாநகரில் விதிமுறைகள் மீறி டிஜிட்டல் விளம்பர பலகைகள் நிறுவப்பட்டதற்காக நுகர்வோர் அமைப்பு சார்பில் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் சார்பில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மாநகரப் பகுதிகளில் தனியார் பங்களிப்புடன் டிஜிட்டல் விளம்பர பலகைகள் நிறுவி மாநகராட்சியின் சுகாதார விழிப்புணர்வு அறிவிப்புகள், பொதுமக்களுக்கான அறிவிப்புகளை தெரிவிக்கும் வகையில் மாநகரில் 30 இடங்களில் டிஜிட்டல் விளம்பர பலகை நிறுவ ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஆங்காங்கே டிஜிட்டல் விளம்பர பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த டிஜிட்டல் விளம்பர பலகைகள் வைக்க ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் தனியார் விளம்பரங்களையும் வெளியிட்டு சொந்த செலவில் பராமரிக்க வேண்டும். இதற்காக ஒரு டிஜிட்டல் பலகைக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். இதற்கு 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதில் நீதிமன்ற உத்தரவு, அரசின் விதிமுறைகள் மீறி டிஜிட்டல் விளம்பர பலகைகள் நிறுவப்பட்டுள்ளதாக கூறி கன்ஸ்யூமர் காஸ் என்ற நுகர்வோர் அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன், ஆட்சியர் த.ந.ஹரிஹரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் சாலைப் பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள விதிமுறைகள், நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றுக்கு எதிராக கோவை மாநகராட்சி நிர்வாகம், தனியார் பங்களிப்புடன் மாநகரில் 30 டிஜிட்டல் விளம்பர பலகைகளை நிறுவியுள்ளது. பொதுவாக விளம்பர பலகைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மட்டுமே அனுமதியும், உரிமமும் வழங்க அதிகாரம் கொண்டவர். அதுவும் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும்.
சாலை சந்திப்புகள், சாலை குறுக்கே விளம்பர பலகைகள் நிறுவக் கூடாது. சாலையில் பாதசாரிகளையொட்டியே நிறுவ வேண்டும்.
மேலும் நெடுஞ்சாலைகளில் விளம்பர பலகைகளை வைக்க அனுமதி கிடையாது. ஆனால், இதில் அனைத்து விதிமுறைகளையும் மீறி மாநகராட்சி நிர்வாகம் டிஜிட்டல் விளம்பர பலகைகளை நிறுவியுள்ளது. இதில் மாநகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக தனியார் நிறுவனத்துக்கு 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. மேலும் ஆட்சியர் அனுமதி அளிப்பதற்கு முன்பாகவே டிஜிட்டல் விளம்பர பலகைகள் நிறுவி மாநகராட்சி பெயரில் மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது.
மேலும் டிஜிட்டல் விளம்பர பலகைகளில் நேரம், கால நிலை அறிவிப்புகள் தவிர வேறு எவ்வித விளம்பரங்களும் இடம்பெறக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.
ஆனால், மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் தனியார் விளம்பரங்களை வெளியிட்டு வருவாய் ஈட்ட வழிவகை செய்துள்ளது. ஆகவே விதிமுறை மீறி அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.