மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் மூலம் 93 ஆயிரம் பேர் பயன்
By DIN | Published On : 24th January 2019 02:21 AM | Last Updated : 24th January 2019 02:21 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் உள்ள 1,697 அங்கன்வாடி மையங்கள் மூலமாக கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் உள்பட 93 ஆயிரத்து 534 பேர் பயனடைந்து வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் கிராமத்தில் உள்ள தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வி அளிக்கப்படுகிறது. மேலும் 6 மாதம் முதல் 36 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு இணை உணவு அளிக்கப்படுகிறது. இரண்டு வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு மதிய உணவுடன் கூடிய பள்ளி முன்பருவக் கல்வி அளிக்கப்படுகிறது.
இதில் கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சியில் 756 அங்கன்வாடி மையங்களும், பேரூராட்சியில் 321 மையங்களும், நகராட்சியில் 103 மையங்களும், மாநகராட்சியில் 517 மையங்களும் என மொத்தம் 1,697 அங்கன்வாடி மையங்கள் மூலமாக 12 ஆயிரத்து 610 கர்ப்பிணிகளும், 10 ஆயிரத்து 610 பாலூட்டும் தாய்மார்களும், 70 ஆயிரத்து 314 குழந்தைகளுக்கும் பயனடைந்து வருகின்றனர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 11 வயது முதல் 14 வயது வரையிலான பள்ளி செல்லா வளர் இளம் பெண்களுக்கு இணை உணவு வழங்கப்படுகிறது. 14 வயது முதல் 18 வயது வரையில் உள்ள அனைத்து வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து, சுகாதாரம், குடும்ப வாழ்க்கை கல்வி, ஆளுமைத் திறன் வளர்ச்சி, தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு வளர்த்தல், பெண்களின் உரிமைகள் தொடர்பான பயிற்சிகள் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.