அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்காக போராட்டம்

கோவை மாவட்டம், ஆனைமலையில் அரசுப் பள்ளிக்கு வராத ஆசிரியர்களைக் கண்டித்து பெற்றோர், மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.


ஆனைமலையில்  எதிர்ப்பு...
கோவை மாவட்டம், ஆனைமலையில் அரசுப் பள்ளிக்கு வராத ஆசிரியர்களைக் கண்டித்து பெற்றோர், மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,  குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகக் கூறி, வால்பாறையில்  ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் சில நாள்களுக்கு முன்பு  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.  அவருக்கு ஆதரவாக பொள்ளாச்சி சார்ஆட்சியர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை முக்கோணம் பகுதியில் செயல்பட்டுவரும் அரசு தொடக்கப் பள்ளியில் பெற்றோர்களும், மாணவர்களும் முற்றுகைப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.  கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இந்தப் பள்ளி பூட்டப்பட்டு கிடப்பதாகவும்,  ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் என யாரைத் தொடர்பு கொண்டாலும் முறையான பதில் இல்லை என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென பொள்ளாச்சி-சேத்துமடை சாலையில் மாணவர்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.  சம்பவ இடத்துக்கு வந்த ஆனைமலை போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது அந்தப் பள்ளியில் பணிபுரியாத ஆசிரியை ஒருவர் மறியல் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்கு வந்தார்.
இதைத் தொடர்ந்து,  போலீஸார்,  ஆசிரியர் வந்துவிட்டார்; இனிமேல் போராட்டத்தை தொடரக் கூடாது,  பள்ளிக்கு மாணவர்களை அனுப்புங்கள் என்று கூறினர். இதைத் தொடர்ந்து குழந்தைகளுடன் பெற்றோர் பள்ளிக்கு சென்றபோது, பள்ளி திறப்பதற்கான சாவி இல்லை. அங்கு வந்திருந்த ஆசிரியர்,  பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் தொடர்பு கொண்டும் சாவி கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது:
நாங்கள் ஏழைகள் என்பதால் எங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கிறோம். ஆனால் எங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கும் வகையில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு வாரத்துக்கும் மேலாகியும் ஒரு ஆசிரியர் கூட வரவில்லை. பள்ளி பூட்டப்பட்டிருக்கிறது.  அதனால், திறந்திருக்கும் பள்ளிகளுக்கு எங்கள் குழந்தைகளை அனுப்ப மாற்றுச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
அம்பாசமுத்திரத்தில் ஆதரவு...அம்பாசமுத்திரம், ஜன. 28: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வைராவிகுளத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒன்றிணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வைராவிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், பெற்றோருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஆதரவாக திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைகளில் போராட்டத்துக்கு ஆதரவான முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், முழக்கமிட்டபடியும் வளாகத்தில் திரண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி போலீஸார் அங்கு சென்று, அரசுப் பள்ளி வளாகத்தினுள் அனுமதியின்றி போராட்டம் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தியதையடுத்து, பெற்றோர் தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மேலும், பழைய ஆசிரியர்களுக்குப் பதிலாக புதிய தற்காலிக ஆசிரியர்களை நியமித்தால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என்றும் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com