சாலை விபத்து: 3 பேர் சாவு
By DIN | Published On : 29th January 2019 01:44 AM | Last Updated : 29th January 2019 01:44 AM | அ+அ அ- |

கோவில்பாளையம் அருகே காளப்பட்டி-அரசூர் சாலை செரயாம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
கோவை அருகே அரசூரில் உள்ள ஃபவுண்டரியில் பணி முடித்து விட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் இருசக்கர வாகனத்தில் கோவில்பாளையம் அருகே காளப்பட்டி-அரசூர் சாலையில், செரயாம்பாளையம் அருகே அவர்கள் தங்கியிருக்கும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வெள்ளக்கிணறு பகுதியிலிருந்து பாரம் ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, எதிரே இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கோவில்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.