ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளைவிடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 29th January 2019 04:06 AM | Last Updated : 29th January 2019 04:06 AM | அ+அ அ- |

ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளை கைது செய்ததைக் கண்டித்தும், அவர்களை விடுவிக்கக் கோரியும் கோவையில் சி.ஐ.டி.யூ. சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாநில துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சி.பத்மபநாபன், செயலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்து சம்மேளன நிர்வாகி எம்.அருணகிரிநாதன், சாலைப் போக்குவரத்து சம்மேளனச் செயலர் எஸ்.மூர்த்தி, குடிநீர் வடிகால் சம்மேளனச் செயலர் எம்.பாலகுமார் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் மீதான கைது நடவடிக்கையை கைவிட வேண்டும், ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் பேசினர். இந்த போராட்டத்தில், பொது விநியோகத் துறை ஊழியர் சங்க நிர்வாகி ஏழுமலை, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்
இதேபோல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ - ஜியோ போராட்டக் குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தின் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் செயலர் சி.ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.