யானை தாக்கி தொழிலாளி சாவு
By DIN | Published On : 29th January 2019 01:45 AM | Last Updated : 29th January 2019 01:45 AM | அ+அ அ- |

கோவை, ஆனைகட்டி அருகே காட்டு யானை தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
ஆனைகட்டி, பனப்பள்ளி அருகே ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் துடியலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, இறந்தவரின் உடலைக் கைப்பற்றி, பெரியநாயக்கன்பாளையம் வனச் சரக அதிகாரிகளுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனப் பணியாளர்கள், இறந்துகிடந்தவர் யானை தாக்கி இறந்திருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் மேலும் நடத்திய விசாரணையில், இறந்த நபர் ஆனைகட்டி அருகேயுள்ள கண்டிவழி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன் (40) என்பது தெரியவந்தது. இவர் மது அருந்திவிட்டு பனப்பள்ளியில் உள்ள தனது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த காட்டு யானைத் தாக்கியதில் முருகன் உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.