காதல் ஜோடி கொலை வழக்கு:  மேலும் 3 பேர் கைது

மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடி  கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீஸார் கைது

மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடி  கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை  மாவட்டம், மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி மகன்கள் கனகராஜ்,  வினோத்.  இருவரும் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டியில் சுமை தூக்கும் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர்.  
கனகராஜ், வெள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளரான அமுதா மகள் வர்ஷினி  பிரியாவை காதலித்து வந்துள்ளார். இதற்கு வினோத்குமார் எதிர்ப்பு  தெரிவித்துள்ளார்.  கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்ய முடிவு எடுத்து வீட்டை விட்டு வெளியேறிய இந்த ஜோடியைக்  கண்டுபிடித்து இவர் பிரித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வர்ஷினிபிரியா அவரது பாட்டி வீட்டுக்குப் பெற்றோரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.  இந்நிலையில் இந்த ஜோடி திருமணம் செய்ய முடிவு செய்து  கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி தனது தந்தை கருப்பசாமியிடம் வர்ஷினிபிரியாவை கனகராஜ் அழைத்துச் சென்றுள்ளார். 
அதற்கு அவர் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி  ஸ்ரீரங்கராயன் ஓடை அருகே உள்ள எம்.ஆர்.டி நகர் பகுதியில் இருவரையும் ஒரு வீட்டில் தங்க வைத்துள்ளார்.  
இதனிடையே இந்த விவகாரம் வினோத்குமாருக்குத் தெரிய வர அவர் கனகராஜ் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது சகோதரர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில்  ஆத்திரமடைந்த வினோத்குமார், கத்தியால் கனகராஜ், வர்ஷினிபிரியா ஆகியோரை சரமாரியாக  வெட்டியுள்ளார்.  இதில் சம்பவ இடத்திலேயே கனகராஜ் உயிரிழந்தார். வர்ஷினிபிரியா படுகாயத்துடன் கோவை  அரசு மருத்துவவமனையில் அனுமதிக்கப்பட்டு சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். 
இதையடுத்து  மேட்டுப்பாளையம் போலீஸாரிடம் வினோத்குமார் புதன்கிழமை சரணடைந்ததைத் தொடர்ந்து அவர் கோவை  மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  
இந்நிலையில் இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வினோத் குமாரின் நண்பர்கள் ராம்குஞ்சு மகன் சின்னராஜ் (27), செல்வம் மகன் கந்தவேல் (23), ராம் மகன் ஐயப்பன் (24)  ஆகியோரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணி தலைமையில் ஆய்வாளர் சென்னகேசவன், உதவி ஆய்வாளர்கள் திலக், ராஜேந்திரபிரசாத், சிவசாமி, நெல்சன் ஆகியோர் கொண்ட குழுவினர் அவர்கள் 3 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து கோவை முதன்மை மாவட்ட நீதிபதி  முன்பு ஆஜர் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com