நாம் சொல்வதை மனம் கேட்க வேண்டும்: சுகி சிவம் பேச்சு

நாம் சொல்வதை மனம் கேட்க வேண்டும் என சுகி.சிவம் பேசினார்.

நாம் சொல்வதை மனம் கேட்க வேண்டும் என சுகி.சிவம் பேசினார்.
கோவை சித்தாபுதூர் மனவளக்கலை, ஸ்கை யோகா மையம் சார்பில், சர்வதேச யோகா தின விழா ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்கை யோகா மைய நிர்வாகி  கணேஷ்குமார் வரவேற்றார்.  வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை மைய பேராசிரியர் அமுதா ராமானுஜம், திரைப்பட  நடிகர் தாமு, டாக்டர் ரவீந்திரநாத், தொழிலதிபர்கள் செல்வராஜ், குற்றாலம், ஓய்வுபெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில், மூத்த யோகா பயிற்றுநர் நானம்மாள் யோகா பயிற்சி அளித்தார். 
விழாவில் சிறப்பு விருந்தினராக ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுகி.சிவம் கலந்து கொண்டு பேசியதாவது: 
பக்தி மார்க்கம் என்பது மனதால் கடவுளுடன் பேசும் முறை. அதில் ஈடுபட குருமார்கள் தேவையில்லை. ஆனால் ஞான மார்க்கத்தில் ஈடுபட குருநாதர் அவசியம் வேண்டும். மனிதனில் இருந்து தொடங்கி கடவுளைக் காணும் ஞானமார்க்கமே சிறந்தது. 
நமது மனம் ஒரு நல்ல அடிமை;  மோசமான எஜமான். மனம் நாம் சொல்வதைக் கேட்க வைக்க வேண்டும். ஞான மார்க்கத்தினால் அது சாத்தியப்படும். மனதின் அடிமையாக நாம் மாறும்பட்சத்தில் ஆசை, விருப்பங்கள் அதிகரித்து, இன்னல்களைச் சந்திக்கும் சூழல் ஏற்படும். தனிமையில் அமர்ந்து துறவு மேற்கொண்டுதான் முக்தியடைய  முடியும் என்று ஞானிகள், முனிவர்கள் கூறியதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இல்லறத்தில் இருந்து கொண்டே துறவு பூண்டு ஞானம் பெறலாம் என்ற மார்க்கத்தை அறிமுகம் செய்தவர் வேதாத்திரி மகரிஷி. ஒவ்வொருவரும் வாழ வேண்டிய வாழ்க்கை முறையை அவர் அளவீடு செய்து யோகக்கலை மூலமாக வகுத்துத் தந்திருக்கிறார். 
உணவு ஒரு எல்லைக்குப் பிறகு விஷமாக மாறிவிடும். வயிற்றில் காற்று, தண்ணீருக்கு இடம் விட்டு, பசி மிச்சமிருக்கும்போதே உணவு உண்பதை முடித்துக் கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் உடல்நலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவுக் கண்காட்சி நடைபெற்றது. அதில் இயற்கை உரங்கள் மூலமாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் இயற்கை உணவுகள் அரங்குகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. 
இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சித்தாபுதூர் மனவளக்கலை மையச் செயலாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு தினமணி நாளிதழ் மீடியா பார்ட்னராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com