"கோவை மண்டலத்தில் ஜிஎஸ்டி செலுத்துவோர் எண்ணிக்கை 1.91 லட்சமாக உயர்வு'

கோவை மண்டலத்தில் சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்துவோரின் எண்ணிக்கை 1.91 லட்சமாக

கோவை மண்டலத்தில் சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்துவோரின் எண்ணிக்கை 1.91 லட்சமாக உயர்ந்திருப்பதாக ஜிஎஸ்டி, மத்திய கலால் துறை ஆணையர் ஜி.ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி ஆணையரகம் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸில் அமைந்துள்ள ஜிஎஸ்டி பவனில் ஜிஎஸ்டி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. ஜிஎஸ்டி, மத்திய கலால் துறை ஆணையர் ஜி.ஸ்ரீனிவாச ராவ் தலைமை வகித்தார். மத்திய மறைமுக வரிகள், சுங்கத் துறை வாரிய முன்னாள் உறுப்பினர் பி.என்.விட்டல் தாஸ் கலந்து கொண்டு இந்திய வரி வசூலிப்பு முறைகள் குறித்துப் பேசினார்.
அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி செலுத்தியவர்கள், தொழில் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி, மத்திய கலால் துறை (தணிக்கை) ஆணையர் என்.ஜே.குமரேஷ், கூடுதல் ஆணையர் மினு பிரமோத், துணை ஆணையர் கோவிந்தராஜ், இணை ஆணையர் விகாஷ் நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி, மத்திய கலால் துறை ஆணையர் ஜி.ஸ்ரீனிவாச ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரி விதிப்பில் ஆரம்பத்தில் பல்வேறு ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டன. ஆனால், ஜிஎஸ்டி மூலம் பொருளாதார சீர்திருத்தம் ஏற்பட்டுள்ளது. 
கோவை மாண்டலத்தில் ஜிஎஸ்டி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் மொத்தம் 99,528 பேர் மட்டுமே மத்திய, மாநில ஜிஎஸ்டி வரிகளுக்கு பதிவு செய்திருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 1,91,550 ஆக உயர்ந்துள்ளது.
இம்மாவட்டங்களில் மத்திய ஜிஎஸ்டி வரிக்கு பதிவு செய்திருப்பவர்களின் எண்ணிக்கையும் 16,515-இல் இருந்து 63,700 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல வரி வருவாயும் கடந்த 2017-18 இல் ரூ.2,911 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2018-19 இல் ரூ.4,610 கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய ஜிஎஸ்டி வரியும் ரூ.1,107 கோடியில் இருந்து ரூ.1,799 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ரூ.406 கோடி வரி வருவாய் ஈட்டப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ரூ.503 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
அதேபோல கடந்த 2017-18 இல் வரிகளை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் 479 பேருக்கு ரூ.117 கோடி திருப்பி வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2018-19 இல் 4,264 பேருக்கு ரூ.529 கோடி திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1,153 பேருக்கு ரூ.152 கோடி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  
மேலும், வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2018 ஜூலை முதல் ரூ.205 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக 35 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com