மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

கோவை, ஆனைக்கட்டி அருகே ஜம்புகண்டி பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடையை

கோவை, ஆனைக்கட்டி அருகே ஜம்புகண்டி பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் மனு அளித்தனர்.
கோவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்  திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஜம்புகண்டியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக்  கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மருத்துவர் ரமேஷ் உள்பட அப்பகுதி மக்கள் அளித்த மனு:
ஜம்புகண்டியில் குடியிருப்புகளுக்கு அருகே மதுபானக் கடை செயல்பட்டு வந்தது. இங்கு மது அருந்துபவர்களால் அந்த வழியே பள்ளிக்கு செல்லும் மாணவிகள், நியாய விலை கடைக்கும் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. 
மேலும் பள்ளி மாணவர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். டாஸ்மாக் கடை அருகே பள்ளியில் இருந்து குழந்தையை வீட்டுக்கு அழைத்து சென்றபோது மருத்துவர் ரமேஷின் மனைவி மீது குடிபோதையில் இருசக்கர வாகனத்தை மோதிய இளைஞரால் சம்பவ இடத்திலேயே அவர் பலியானர். 
குழந்தையும் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அங்கு நடைபெற்ற போராட்டத்தால் மதுபானக்கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி கடையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கு வேண்டும்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் ஜம்புகண்டி பகுதியில் மூடப்பட்டுள்ள மதுக்கடையை திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 
ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: 
ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி திராவிடத் தமிழர் கட்சித் தலைவர் சி.வெண்மணி அளித்துள்ள மனுவில், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆணவகொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது, சமூகத்தில் தேவையற்ற பதற்றங்களையும், வன்முறைகளையும் ஏற்படுத்த ஜாதிய மோதல்களுக்கு வழிவகுக்கிறது. திராவிட தமிழர் கட்சி உள்பட பல அமைப்புகளும் ஆணவக் கொலைகளை தடுக்க கடுமையான சட்டப்பிரிவு கொண்ட தனி சட்டத்தை இயற்றக்கோரி தொடர்ந்து போராடி வருகிறோம். தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் உடனடியாக ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாறை ஓவியங்களை பாதுகாக்க வேண்டும்:    தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலாளர் ப.பா.ரமணி அளித்துள்ள மனுவில், கோவை மாவட்டத்தில் குமிட்டிபதி, பொன்பரப்பி, வேட்டைக்காரன் மலை உள்ளிட்ட பகுதிகளில் நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இப்பாறை ஓவியங்கள் குறித்த புரிதல்கள் இல்லாமல் பராமரிப்பில்லாமல் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நமது பொக்கிஷங்களான இவற்றை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனீ வாரியம் தேவை: தேனீக்களை பாதுகாத்து, தேன் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தனி வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க, கோவை மாவட்டக் குழுத் தலைவர் சு.பழனிசாமி மனு அளித்தார்.
 பீளமேடு ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதி வடமாநில இளைஞர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கூடாரம் அமைத்து தங்கிக்கொள்வதால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பகுதி செயலாளர் எஸ்.பி.வெள்ளியங்கிரி மனு அளித்தார்.
 கோவை, குருடம்பாளையம் ஊராட்சி கே.வடமதுரையில் அமைக்கப்பட்டு வரும் தீண்டாமை சுவரை அகற்றக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர் சி.ராகவன் ஆகியோரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com