விபத்தில் பெண் பலி: உறவினர்கள் சாலை மறியல்

மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த பெண், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த பெண், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் உதகை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம், குட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி ருக்மணி (37). இவர்கள்  மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்துவிட்டு மீண்டும் குட்டையூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவை சாலையில் உள்ள திரையரங்கு அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி இவர்கள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்த மருத்துவர்கள் ருக்மணியை பரிசோதனை செய்துவிட்டு, அன்னூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஸ்கேன் செய்வதற்காக அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
 இந்நிலையில் இரவு 8.30 மணி அளவில் ருக்மணி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் பணியில் இருந்த மருத்துவர் லட்சுமணனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், உதகை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   
இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே பணியில் இருந்த மருத்துவர் தாக்கப்பட்டது குறித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சேரலாதன், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில்  புறக்காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் எனவும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com