குரூப்-4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி தொடக்கம்
By DIN | Published On : 05th July 2019 07:30 AM | Last Updated : 05th July 2019 07:30 AM | அ+அ அ- |

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி தொடக்க விழா பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது.
கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், பொள்ளாச்சி வருவாய்த்துறை, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி ஆகியன இணைந்து நடத்தும் இப்பயிற்சிகள் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு மாதங்கள் நடைபெறவுள்ளன.
பயிற்சியின் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொள்ளாச்சி கோட்டாட்சியர் ரவிகுமார் பயிற்சியை தொடங்கி வைத்தார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் ஜோதிமணி, என்ஐஏ கல்வி நிறுவனங்களின் திட்ட அலுவலர் நாகராஜ், வட்டாட்சியர் தணிகைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மாதிரி தேர்வும் நடத்தப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வழிகாட்டுவதற்காக இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை, ஆனைமலை, கோட்டூர், வால்பாறை, கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த குரூப்-4 தேர்வு எழுத உள்ளவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். பயிற்சி துவக்க விழாவின்போது வராதவர்களும் வரும் சனிக்கிழமை நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்கலாம்.