மாவட்ட நெட்பால் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு
By DIN | Published On : 05th July 2019 07:26 AM | Last Updated : 05th July 2019 07:26 AM | அ+அ அ- |

தமிழக அளவிலான நெட்பால் போட்டிகள் ராமநாதபுரத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, கோவை மாவட்ட நெட்பால் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு அல்வேர்னியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
மகளிருக்கான மாநில அளவிலான நெட்பால் போட்டி ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற உள்ளது. இதில் பங்கு பெறும் கோவை மாவட்ட அணிக்கான வீராங்கனைகள் தேர்வு அல்வேர்னியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட நெட்பால் கழக நிர்வாகிகள் தேர்வாளர்களாக செயல்பட்டு 40 மாணவியர்களில் இருந்து 12 பேரை தேர்வு செய்தனர். பின்னர் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து கோவை மாவட்ட நெட்பால் அணியினரை ஜி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகச் செயலாளர் பிரசன்னா ராதாகிருஷ்ணன், அல்வேனியா பள்ளி முதல்வர் மரிய ஜோசப், உடற்கல்வி ஆசிரியை மனோன்மணி, அணி மேலாளர் அழகிரிசாமி ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.