சுடச்சுட

  

  கோவை மாநகராட்சியில்  குடிநீர் இணைப்பு விண்ணப்பங்கள் தேக்கம்

  By DIN  |   Published on : 13th July 2019 10:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை மாநகராட்சியில் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் தேக்கமடைந்துள்ளன. விரைவில் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
  கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, பவானி, ஆழியாறு கூட்டுக்
   குடிநீர்த் திட்டங்கள் மூலமாகக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 100 வார்டுகளுக்கும் சேர்த்து 265 எம்எல்டி குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது 90 எம்எல்டி குடிநீர் பற்றாக்குறையாக உள்ளதால் 175 எம்எல்டி குடிநீர் மட்டுமே மாநகரில்  விநியோகிக்கப்பட்டு வருகிறது. 
  இதில், சிறுவாணி அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 10 கோடி லிட்டரில் இருந்து 5.5 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சிறுவாணி குடிநீர் விநியோகிக்கப்பட்ட 23 வார்டுகளில், பில்லூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருந்த பகுதிகளில் மாநகராட்சி லாரிகள் மூலமாகத் தண்ணீர் விநியோகிக்கப்பட்டன. 
  இந்நிலையில் 5 மாதங்களாக கிடப்பில் உள்ள புதிய குடிநீர் இணைப்பு விண்ணப்பங்களை பரிசீலித்து விரைவில் குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 
  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த மாதங்களில் குடிநீர்ப் பற்றாக்குறையைத் தடுக்கும் விதமாக மாநகராட்சி மூலமாக புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை. தற்போது, சிறுவாணி உள்பட கோவையின் முக்கிய நீராதாரங்களில் போதிய அளவு குடிநீர் உள்ளதால் நிலுவையில் உள்ள குடிநீர் இணைப்பு விண்ணப்பங்களை பரிசீலித்து விரைவில் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்றனர். 
  இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 5 மண்டலங்களிலும் கடந்த 5 மாதங்களாக 4 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்பு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது மூப்பு அடிப்படையில் ஜனவரி மாதம் விண்ணப்பித்தவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai