சுடச்சுட

  

  சமூக வலைதளங்களில் தவறான கருத்துகள் பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு

  By DIN  |   Published on : 13th July 2019 10:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை பரப்புவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
  கோவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேசிய புலனாய்வு முகமை மற்றும் போத்தனூர் காவல் துறையினர்  சிலரது வீடுகளில் சோதனை செய்தனர். இதில் சிலர் கைதும் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சில இடங்களைக் குறிப்பிட்டு கட்செவி அஞ்சல், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவின. 
   இதுபோன்று தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 
  இதுகுறித்து மாநகர காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவையில் உள்ள 15 காவல் நிலையங்கள் வாரியாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக, தெற்கு உள்கோட்டத்துக்கு உள்பட்ட காவல் நிலையங்கள் மூலம் பொதுமக்களிடம் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
   சமூக வலைதளங்களில் மதரீதியிலான மோதலை ஏற்படுத்தும் தகவல்கள், தவறான பதிவுகளை பகிரக்கூடாது. பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு செயல்படக் கூடாது. அவ்வாறு செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். சாலை போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள் தங்களது பகுதிகளில் சுற்றினால் அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது போன்ற கருத்துகள் குறித்து காவல் ஆய்வாளர்கள் மூலம் அவர்களது காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai