நிலையத்துக்குள் செல்லாத பேருந்துகளுக்கு அபராதம்: போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் இயக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு, கோவை வடக்கு போக்குவரத்துத் துறை அதிகாரிகள்

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் இயக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு, கோவை வடக்கு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 
கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்துக்குள் பெரும்பாலான பேருந்துகள் செல்லாமல் இயக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் பயணிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு  மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கடந்த வாரம்  வடக்கு மண்டல போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
இதைத் தொடர்ந்து, புதிய பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் இயக்கப்பட்டு வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அதன்படி, 65 அரசு, தனியார் பேருந்துகள் நிலையத்துக்குள் செல்லாமல் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. 
அதேபோல்,  அதிக சுமை ஏற்றிச் சென்ற 56  சரக்கு வாகனங்கள், 6 ஆம்னி பேருந்துகள், ஒரு சிற்றுந்து, தனியார் நிறுவன வாகனங்கள் 3, கல்வி நிறுவன வாகனங்கள் 3, சுற்றுலா வேன் 1, சுற்றுலாப் பேருந்து 43, ஆட்டோ 4 உள்ளிட்ட வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விதிமீறிய வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்து 975 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 
மேலும் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் உக்கடத்தில் இருந்து காளப்பட்டி வரை இயக்கப்பட வேண்டிய தனியார் நகரப் பேருந்து (24) காளப்பட்டிக்குச் செல்லாமல், சரவணம்பட்டியுடன் திரும்பிச் செல்வதாக மக்கள் கொடுத்த புகாரின் பேரில், அந்தப் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டு கோவை வடக்கு போக்குவரத்து மண்டலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதாக் கிடைக்கும் புகார்களின் அடிப்படையில் தனியார் பேருந்துகளின் இயக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com