பவானி ஆற்றில் 7 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பில்லூர் அணையிலிருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பில்லூர் அணையிலிருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக்காடு பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பில்லூர் அணை உள்ளது. நீலகிரி மாவட்டம், கேரளத்தில் பெய்யும் மழை நீரை ஆதாரமாகக் கொண்டு இந்த அணை கட்டப்பட்டுள்ளது. 
பில்லூர் அணை மற்றும் பவானி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் 15-க்கும் மேற்பட்ட குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
 இந்த அணை நீர் ஆற்றுப் பாசனத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. அணையின் மொத்த நீர் மட்டம் 100 அடி. இந்த அணையில் கடந்த சில நாள்களுக்கு முன் 83.50 அடி வரை தண்ணீர் நிரம்பி இருந்தது. 
இந்நிலையில் நீலகிரி மாவட்டம், மேல் பவானி, பவர் ஹவுஸ் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் மழை பெய்ததால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணைக்கு விநாடிக்கு 1,443 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் அணை நீர் மட்டம் 88.50 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் ஒரே நாளில் 4.25 அடி உயர்ந்து வியாழக்கிழமை 92.75 அடியை எட்டியது. 
 பில்லூர் அணைக்கு வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 9,108 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 7,056 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 89.75 அடியாக இருந்தது.
 பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பவானி ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பவானி ஆற்றில் கரையோரப் பகுதிகளில் குளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பவானிசாகர் அணை நிரம்பி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com