சுடச்சுட

  

  அஞ்சல் துறை தேர்வுகளைத் தமிழிலேயே நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்

  By DIN  |   Published on : 14th July 2019 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  அஞ்சல் துறை தேர்வுகளைத் தமிழிலேயே தொடர்ந்து நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
  இந்தியாவில் அஞ்சல் துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில், முதல் தாளுக்கான தேர்வில் இனி ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு வினாத்தாள்கள் மட்டுமே மாநில மொழிகளில் இருக்கும் என்றும் அஞ்சல் துறை அறிவித்தது.
  இதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.
  அப்போது அவர் கூறும்போது, அதிமுக ஆட்சி மறைந்த முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நடக்கக் கூடியது. மறைந்த தலைவர்களின் வழியைப் பின்பற்றியே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
  தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு வழிகளில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தற்போது அஞ்சல் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீர்வு காண்போம் என்றார்.
  மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம்...
  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீர் மேலாண்மை இயக்க விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை தொடங்கிவைத்துப் பேசியதாவது: 
  தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை சராசரியை விட 12 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது. இதனால், நீர் நிலைகள் வறண்டு தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக நீர் மேலாண்மைக்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 
  மத்திய அரசு சார்பில் நீர் மேலாண்மை இயக்கம் தொடங்கப்பட்டு ஏரி, குளம் மற்றும் குட்டைகளைத் தூர்வாரி புனரமைத்தல், மழைநீர் சேகரிப்பினை அமைத்தல், கழிவுநீரை சுத்திகரித்து விவசாயத்துக்குப் பயன்படுத்துதல், விவசாய நிலங்களில் மண் வரப்பு அமைத்தல், நிலத்தடி நீரைப் பெருக்குவதற்காக கட்டமைப்பு ஏற்படுத்துதல்,   அதிக அளவில் ஆக்ஸிஜனை வெளியேற்றக் கூடிய மரங்களை வளர்த்தல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  மேலும், தமிழகத்தில் இனி புதிதாகக் கட்டப்படும் அனைத்துக் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்படும். நீர் மேலாண்மை இயக்கத்தில் மக்களும் தங்களை இணைத்துக் கொண்டு நாட்டை வளமாக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.
  நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, ஏ.சண்முகம், கஸ்தூரி வாசு, வி.பி.கந்தசாமி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத், துணை ஆணையர் பிரசன்ன ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai