சுடச்சுட

  

  கோவையில் கடத்தப்பட்ட சிறுமி சென்னையில் மீட்பு: போலீஸார் விசாரணை

  By DIN  |   Published on : 14th July 2019 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவையில் கடத்தப்பட்ட 13 வயது சிறுமி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரால் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டார். 
  பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிரஞ்சன்குமார் (19). இவர் கோவை, சின்னியம்பாளையத்தில் உள்ள பஞ்சாலையில் கடந்த சில மாதங்களாகப் பணியாற்றி வந்துள்ளார். அதே பஞ்சாலையில் வேலை பார்த்து வந்த ஒருவரின் 13 வயது மகளுக்கும், நிரஞ்சன்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் வியாழக்கிழமை (ஜூலை 11) காலை மாயமாகினர்.
  இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பஞ்சாலையில் வேலை பார்க்கும் நிரஞ்சன் குமாரின் நண்பர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்டத்துக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருப்பதும், இதற்காக கேரளத்தில் இருந்து தன்பாத்துக்குச் செல்லும் ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்ததும் தெரியவந்தது. 
  இது தொடர்பாக கோவை ரயில்வே போலீஸாருக்கு பீளமேடு போலீஸார் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, கோவை வந்த தன்பாத் ரயிலில் போலீஸார் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
  இதில்  இருவரும் கோவை ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறவில்லை என்பது தெரியவந்தது. போலீஸார் தேடுவதை அறிந்து வேறு ரயில் நிலையத்தில் இருந்து செல்லலாம் என சந்தேகித்து திருப்பூர், ஈரோடு ரயில்வே போலீஸாருக்கு கோவை ரயில்வே போலீஸார் தகவல் தெரிவித்தனர். ஆனாலும், அவர்கள் கிடைக்கவில்லை. 
  இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறுமியுடன் நின்றிருந்த  நிரஞ்சன்குமாரை ரயில்வே குழந்தைகள் நல அமைப்பினர் மீட்டு விசாரித்ததில், கடத்தி வரப்பட்டது கோவையைச் சேர்ந்த சிறுமி என்பது தெரியவந்தது. பின் இருவரும் சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 
  இதனையடுத்து, மீட்கப்பட்ட சிறுமியை குழந்தைகள் நல அமைப்பிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.  நிரஞ்சன்குமாரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமி மீட்கப்பட்டது தொடர்பாக அவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பெற்றோரிடம் சிறுமி ஒப்படைக்கப்படுவார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai