காருண்யா பல்கலை.யில் தென்னிந்திய விளையாட்டுப் போட்டி: வாலிபால், கூடைப்பந்து போட்டிகளில் தமிழக பள்ளி அணிகள் வெற்றி

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் வாலிபால், கூடைப்பந்து போட்டிகளில் தமிழக அணிகள் வெற்றி


கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் வாலிபால், கூடைப்பந்து போட்டிகளில் தமிழக அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
காருண்யா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மறைந்த டி.ஜி.எஸ். தினகரனின் மகள், மறைந்த இவாஞ்சலின் நினைவாக கடந்த 25 ஆண்டுகளாக தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த ஆண்டு தென்னிந்திய அளவிலான பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறமையை ஊக்குவிக்கும் விதமாக பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆடவருக்கு கூடைப்பந்து, கால்பந்து, வாலிபால் போட்டிகளும், மகளிருக்கு வாலிபால், கூடைப்பந்து போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகள் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை (ஜூலை 13) வரை நடைபெற்றன.
இதில், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், புதுவையைச் சேர்ந்த 96 பள்ளிகளின் சுமார் 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இறுதிப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
ஆடவர் கூடைப்பந்து இறுதி ஆட்டத்தில் கோட்டயம், புனித எபிரேம் பள்ளி அணி 56 - 46 என்ற புள்ளிகள் கணக்கில் திருவனந்தபுரம், புனித சூசையப்பர் பள்ளி அணியைத் தோற்கடித்தது. 3 ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் கோவை, பி.எஸ்.ஜி. மேல்நிலைப் பள்ளி அணி 58 - 51 என்ற புள்ளிகள் கணக்கில் சேலம், பாரதிய வித்யாலயா பள்ளி அணியைத் தோற்கடித்தது.
அல்வேர்னியா பள்ளி  முதலிடம்:
மகளிர் கூடைப்பந்து போட்டியில் கோவை, அல்வேர்னியா பள்ளி அணி 64 - 63 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை, பெரம்பூர் புனித சூசையப்பர் பள்ளி அணியை வீழ்த்தியது. 3 ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் போட்டியில் ஈரோடு, ராஜேந்திரன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி அணி 47 - 45 என்ற புள்ளிகள் கணக்கில் சேலம், குகை புனித சூசையப்பர் பள்ளி அணியை வீழ்த்தியது.
மகளிர் வாலிபால் போட்டியில், சேலம், ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் பள்ளி அணி முதலிடம் பிடித்தது. சேலம், ஏ.என்.மங்கலம் புனித மரியாள் பள்ளி அணி இரண்டாமிடத்தையும், கண்ணூர், ஜி.வி. பள்ளி அணி, தருமபுரி, அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணி ஆகியவை முறையே 3, 4 ஆவது இடங்களைப் பிடித்தன.
ஆடவர் கால்பந்து போட்டியில் மலப்புரம், எம்.எஸ்.பி. மேல்நிலைப் பள்ளி அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் கொல்லம், ஸ்ரீ நாராயணா மேல்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தியது. 3 ஆவது இடத்துக்கான ஆட்டத்தில், மலப்புரம், என்.என். மெட்ரிக் பள்ளி அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் நெய்வேலி, என்.எல்.சி. பள்ளி அணியை வீழ்த்தியது.
ஆடவர் வாலிபால் போட்டியில் நெல்லை, எம்.என்.அப்துர் ரஹ்மான் பள்ளி அணி முதலிடத்தையும், திருச்சி, காஜாமியான் பள்ளி அணி 2-ஆவது இடத்தையும் பிடித்தது. கோவை, சபர்பன் பள்ளி அணி, மதுரை, அமெரிக்கன் கல்லூரி பள்ளி அணி ஆகியவை 3, 4 ஆவது இடங்களைப் பிடித்தன. 
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளின் வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் பரிசளித்துப் பாராட்டினார். பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன், இவாஞ்சலின் பால் தினகரன், அறங்காவலர் சாமுவேல் பால் தினகரன், துணைவேந்தர் மன்னர் ஜவஹர், பதிவாளர் எலைஜா பிளசிங், உடற்கல்வி இயக்குநர் காலேப் ராஜன் உள்ளிட்டோர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com