மாநகரில் 4 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையுடன் இணைப்பு : மாநகர காவல் ஆணையர் சுமித் சரண்

கோவை மாநகரில் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 4 ஆயிரம்


கோவை மாநகரில் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 4 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.
கோவை, காட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட காந்திபுரம் பேருந்து நிலையங்கள், ஆவாரம்பாளையம் சாலை, சத்தி சாலை, ஜி.பி.சிக்னல், நூறடி சாலை உள்பட இடங்களில் தனியார் பங்களிப்புடன் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்காளை காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் நிகழ்ச்சியும், காட்டூர் காவல் நிலையத்தில் புனரமைக்கப்பட்ட போலீஸ் உதவி சேவை மைய திறப்பு விழாவும் சனிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் பேசியதாவது: கோவை மாநகரில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை அடையாள காண்பதற்கும் நகரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியாக இருக்கின்றன. ஆர்.எஸ்.புரம், பீளமேடு, சாய்பாபா கோயில் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் 4 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை குடியிருப்போர் நலச் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பொருத்தப்பட்டுள்ளன.அதன்படி காட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள 200 கண்காணிப்பு கேமராக்களும், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டறிந்து உடனுக்குடன் கைது செய்ய முடியும். மேலும், குற்றச் சம்பவங்களை குறைக்கவும் முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன், உதவி ஆணையர் எழிலரசு, நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் வெற்றிச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com