என்ஐஏ சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: எஸ்டிபிஐ மாநிலத் தலைவர்
By DIN | Published On : 19th July 2019 08:40 AM | Last Updated : 19th July 2019 08:40 AM | அ+அ அ- |

தேசிய புலனாய்வு முகமை அமைப்புக்கு உச்சபட்ச அதிகாரம் வழங்கும் சட்டதிருத்த மசோதாவை மத்திய அரசுத் திரும்பப் பெற வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கோவை உக்கடத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள தனிமனித உரிமைக்கு எதிரான வகையில் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கினால் அவர்கள் சிறுபான்மையினர், மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பல முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே, என்ஐஏ அமைப்புக்கு உச்சபட்ச அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.
மாவட்டத் தலைவர் ராஜா ஹுசைன், மாவட்ட பொதுச்செயலர் இசாக் அகமது, துணைத் தலைவர்கள் சிவகுமார், அன்சர் ஷெரீப், அப்துல் காதர், வர்த்தக அணித் தலைவர் அப்துல் ரஹீம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.