ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வனச் சரகர் கைது
By DIN | Published On : 19th July 2019 08:59 AM | Last Updated : 19th July 2019 08:59 AM | அ+அ அ- |

கோவை மாவட்டம், வால்பாறையில் மரம் வெட்டி கொண்டு செல்ல அனுமதிச்சீட்டு வழங்குவதற்கு ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்ற வனச் சரக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியைச் சேர்ந்தவர் உத்தரசாமி. இவர் ஒப்பந்தம் பெற்று வால்பாறையில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் இருந்து மரம் வெட்டி எடுத்துச் செல்லும் பணி செய்து வருகிறார். தற்போது வால்பாறை அருகே தனியார் காபி நிறுவனத்துக்கு சொந்தமான வில்லோனி எஸ்டேட் பகுதியில் மரங்களை வெட்டி கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
மாவட்ட நிர்வாகம், மாவட்ட வன அலுவலர் உத்தரவுக்குப் பின்னரே மரம் வெட்டும் பணியை மேற்கொண்டாலும், வெட்டப்படும் மரங்களை லாரி மூலம் கொண்டு செல்ல வனச் சரக அலுவலரிடம் அனுமதிச்சீட்டு பெறுவது கட்டாயமாகும்.
வால்பாறை வனச் சரக அலுவலராக கடந்த 12-ஆம் தேதி வரை இருந்த சக்திகணேஷ் (53), தற்போது அட்டகட்டியில் உள்ள வனத் துறை பயிற்சி மையத்தின் அலுவலராக பொறுப்பேற்றுள்ளார்.
இவர் வால்பாறை வனச் சரக அலுவலராக இருந்தபோது வில்லோனி எஸ்டேட்டில் இருந்து வெட்டிய மரங்களை லாரி மூலம் கொண்டு செல்ல அவரிடம் உத்தரசாமி அனுமதிச் சீட்டு கேட்டுள்ளார். அப்போது அவர் அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.1.30 லட்சம் லஞ்சம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.
இதற்கு சில நாள்கள் அவகாசம் கேட்ட உத்தரசாமி, இதுதொடர்பாக கோவையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அட்டகட்டி பேருந்து நிறுத்தம் முன்பு வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு சக்தி கணேஷிடம் உத்தரசாமி வழங்கும்போது அப்பகுதியில் மறைந்து நின்று கண்காணித்த கோவை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராஜேஷ் தலைமையில் ஆய்வாளர்கள் பிரபுதாஸ், ஆறுமுகம் ஆகியோர் வனச் சரக அலுவலர் சக்தி கணேஷை பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.1.30 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் சக்தி கணேஷ் 50 அனுமதிச்சீட்டு வழங்க லஞ்சம் பெற்றதாகத் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சக்தி கணேஷின் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக டி.எஸ்.பி. ராஜேஷ் தெரிவித்தார்.
இதனிடையே சக்தி கணேஷுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் வால்பாறை வனத் துறையினர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.