தமிழக விவசாயிகளைமத்திய அரசு நசுக்குகிறது: பி.ஆர்.நடராஜன் எம்.பி. குற்றச்சாட்டு
By DIN | Published On : 22nd July 2019 10:07 AM | Last Updated : 22nd July 2019 10:07 AM | அ+அ அ- |

மத்திய அரசின் நடவடிக்கைகள் தமிழக விவசாயிகளை நசுக்கும் வகையில் உள்ளதாக கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு கூறியிருப்பதாக கண்டனத்துக்குரியது. விவசாயிகளை அனைத்து வகையிலும் மத்திய அரசு நசுக்கப் பார்க்கிறது. ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தில்லி ஜந்தர்மந்தரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி தேவை என்கிற விதியை மாற்றக் கூடாது. பழைய மின் அழுத்த கோபுரங்களுக்கு வாடகையை தீர்மானிக்க வேண்டும்.
மின்சாரத்தை புதைவட தடமாக கொண்டுச் செல்ல வேண்டும். மின்சாரம் கொண்டு செல்லும் முறை நவீனப்படுத்த வேண்டும். மத்திய அரசின் இந்த செயல் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதற்கு சமம்.
மத்திய அரசின் முடிவுகள் குறித்து தமிழக எம்.பி.க்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். தில்லியில் துறை சார்ந்த மத்திய அமைச்சர்களை சந்தித்து இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.