தங்க நகைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 24th July 2019 08:40 AM | Last Updated : 24th July 2019 08:40 AM | அ+அ அ- |

குறு, சிறு தொழில்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்குவதைப் போல தங்க நகைத் தொழில் பட்டறைகளுக்கும் வழங்கக் கோரி, கோவையில் சி.ஐ.டி.யூ. தங்க நகைத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காந்தி பூங்கா பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பலவேசம் தலைமை தாங்கினார். கோரிக்கைகள் குறித்து பொதுச் செயலர் பி.சந்திரன், சி.ஐ.டி.யூ. மாநில துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், ஆட்டோ சங்கச் செயலர் பி.கே.சுகுமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் என்.வி.தாமோதரன் ஆகியோர் உரையாற்றினர்.
இது குறித்து தங்க நகைத் தொழிலாளர்கள் கூறியதாவது:
வீட்டில் இருந்தபடியே தங்க நகைத் தொழில் செய்யும்போது ஏற்படும் மின்சார செலவை, வீட்டு உபயோகம் என்ற கணக்கின் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்ற சலுகையை அரசு வழங்குகிறது. ஆனால், மின் வாரிய அதிகாரிகளோ அவர்களிடம் வணிக ரீதியான பயன்பாடாக கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கு அபராதம் விதிப்பதுடன், இந்தத் தொழில் செய்பவர்களை திருடர்கள் போல பாவிக்கின்றனர்.
இது போன்ற அத்துமீறல் நடவடிக்கைகளை மின்வாரியம் கைவிட வேண்டும். தங்க நகைப் பட்டறைக்கு குறு, சிறு தொழில்களுக்கு வழங்கப்படுவதைப் போல 3-ஏ1 என்ற பிரிவின் கீழ் வழங்க வேண்டும். தங்க நகை தொழிற்சாலைகளிலும், யூனிட்டுகளிலும் தொழிலாளர் நலச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இத்தொழிலில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தை அமலாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். இவற்றை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.என்.கண்ணன், நிர்வாகிகள் கோபால், மருதன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.